மும்பை இந்தியன்ஸை 13 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மண்ணில் வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் நிலையில், சனிக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் மோதின.
11 புள்ளிகளுடன் சிஎஸ்கே, 10 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின. 2 அணிகளுக்குமே இது முக்கியமான போட்டி. ஐபிஎல்லில் பரம எதிரி அணிகளான மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நெஹல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷ்த் கான்.
IPL 2023: குஜராத்துக்கு எதிரான தோல்வி.. ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களை செம காட்டு காட்டிய சங்கக்கரா
முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேமரூன் க்ரீன் - இஷான் கிஷன் இறங்கினர். ரோஹித் சர்மா இந்த போட்டியில் ஓபனிங்கில் வரவில்லை. கேமரூன் க்ரீன் 6 ரன்களுக்கு துஷார் தேஷ்பாண்டேவின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மா(0) மற்றும் இஷான் கிஷன் (7) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் தீபக் சாஹர்.
அதன்பின்னர் நெஹல் வதேராவுடன் நிதானமாக நின்று பார்ட்னர்ஷிப் அமைத்த மும்பை அணியின் முக்கியமான வீரரான சூர்யகுமார் யாதவும் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த வதேரா 64 ரன்கள் அடித்து பதிரனாவின் பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரையும் மதீஷா பதிரனா தான் வீழ்த்தினார்.
20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே அடித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 140 ரன்கள் என்ற எளிய இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்தது. சிஎஸ்கே அணி சார்பில் மதீஷா பதிரனா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
140 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி 4.1 ஓவரில் 46 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 16 பந்தில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரஹானே 21 ரன்களுக்கும், ராயுடு 12 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, நிதானமாக நின்று ஆடிய டெவான் கான்வே 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 26 ரன்கள் அடித்து கடைசிவரைந் இன்று போட்டியை முடித்து கொடுத்தார். இலக்கு எளிதானது என்பதால் சிஎஸ்கே அணி எளிதாக வெற்றி பெற்றது.
சிஎஸ்கே அணி சென்னை மண்ணில் 13 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசியாக 2010ல் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே அணி வீழ்த்தியிருந்தது. அதன்பின்னர் சென்னையில் மும்பை அணியை சிஎஸ்கே வீழ்த்தியதில்லை. 13 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றி பெற்றது.