நீங்க தலையிட்டுத்தான் தீர்வு காணனும்..! ஆஸி.,க்கு எதிராக ஐசிசியிடம் பஞ்சாயத்து வைக்கும் தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Feb 9, 2021, 3:51 PM IST
Highlights

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து ஆஸி., அணி பின்வாங்கியதால் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்த்துவைக்குமாறு ஐசிசியிடம் முறையிட்டுள்ளது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா(தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்).
 

கொரோனாவிற்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கப்பட்டன. 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்ற இங்கிலாந்து அணி 3 டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவிட்டு, கொரோனா அச்சுறுத்தலால் ஒருநாள் போட்டிகளில் ஆடாமல் திரும்பிவிட்டது. அதனால் பொருளாதார ரீதியாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா(தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்) பொருளாதார இழப்பை சந்திக்க நேரிட்டது.

அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தது கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா. பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனாவை காரணம் காட்டி, இந்த சுற்றுப்பயணத்திலிருந்து பின்வாங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா(ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்), இந்த தொடரை ஒத்திவைப்பதாக தெரிவித்துவிட்டது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவை கடும் அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் ஆளாக்கியது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவால், ஏற்கனவே பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருக்கும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா, பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடுவதுடன், பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும். அந்த காரணத்தை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டு நல்ல முடிவு காண உதவ வேண்டும் என்று ஐசிசிக்கு கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா கடிதம் எழுதியுள்ளது.

click me!