ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை 4ம் இடத்திற்கு தள்ளிவிட்டு இங்கிலாந்து முதலிடம்

By karthikeyan VFirst Published Feb 9, 2021, 2:40 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

2019 ஆஷஸ் தொடரிலிருந்து நடக்கும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன், திட்டமிடப்பட்ட அனைத்து டெஸ்ட் தொடர்களும் முடிந்த பின் புள்ளி பட்டியலில் டாப் 2 இடங்களில் இருக்கும் அணிகள், இறுதி போட்டியில் மோதும்.

ஒவ்வொரு அணியின் வெற்றி விகிதத்தின் அடிப்படையில், புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. வெற்றி சதவிகிதத்தின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுவதால், ஒவ்வொரு வெற்றியும் மிக முக்கியம்.

நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்ட நிலையில், 2வது அணி எதுவென்பதை தீர்மானிக்கும் முக்கியமான டெஸ்ட் தொடர், இந்தியா இங்கிலாந்து இடையே நடந்துவரும் டெஸ்ட் தொடர் தான். இந்த தொடரில் குறைந்தது 2 போட்டிகளில் வென்று தொடரை வென்றால்தான், இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இங்கிலாந்து அணி குறைந்தது 3 போட்டிகளில் வென்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம். இது இரண்டுமே நடக்காமல் போனால், ஆஸி., அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துவிடும்.

அந்தவகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது. இந்த தொடரின் முதல் போட்டி சென்னையில் நடந்த நிலையில், அதில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 70.2 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் நான்காமிடத்திலிருந்து நேரடியாக முதலிடத்திற்கு முன்னேறி, இந்தியாவை நான்காமிடத்திற்கு தள்ளியுள்ளது. நியூசிலாந்து அணி 70 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும், ஆஸி., அணி 3ம் இடத்திலும் உள்ளன.
 

click me!