#INDvsENG இங்கிலாந்திடம் சரணடைந்த இந்திய அணி..! முதல் டெஸ்ட்டில் படுதோல்வி.. ஆட்டநாயகன் ஜோ ரூட்

By karthikeyan VFirst Published Feb 9, 2021, 2:00 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் இரட்டை சதம்(218), சிப்ளி(87), ஸ்டோக்ஸின்(82) சிறப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 578 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் புஜாரா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். புஜாரா 73 ரன்களும், ரிஷப் பண்ட் 91 ரன்களும், சுந்தர் 85 ரன்களும் அடித்தனர். இவர்கள் மூவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ரோஹித், கோலி, ரஹானே ஆகிய நட்சத்திர வீரர்கள் சோபிக்கவில்லை. அதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 337 ரன்கள் மட்டுமே அடித்தது.

241 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸை முதல் பந்திலேயே வீழ்த்தி, விக்கெட் வேட்டையை தொடங்கிய அஷ்வின், அதன்பின்னர் இங்கிலாந்து பேட்டிங் ஆர்டரை சரித்தார். ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளம், 4ம் நாளான நேற்றைய ஆட்டத்தில் ஸ்பின்னிற்கு ஒத்துழைப்பு கொடுத்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அஷ்வின், அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகமாக ஸ்கோர் அடித்து மெகா இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிக்கும் கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணி, வேகமாக ஸ்கோர் செய்யும் முயற்சியில் விக்கெட்டுகளை இழந்தது.

ஜோ ரூட் அதிரடியாக ஆடி 32 பந்தில் 40 ரன்கள் அடித்தார். சிப்ளி, லாரன்ஸ், ஸ்டோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போப் 28 ரன்னிலும், பட்லர் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க, டெய்லெண்டர்களை அடுத்தடுத்து அசால்ட்டாக வீழ்த்தினார் அஷ்வின். அதனால் வெறும் 178 ரன்களுக்கே 2வது இன்னிங்ஸில் சுருண்டது இங்கிலாந்து அணி. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இங்கிலாந்து அணி 419 ரன்கள் முன்னிலை பெற, 420 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 4ம் நாள் ஆட்டத்தின் கடைசி 17 ஓவர்கள் பேட்டிங் ஆடியது. அதில் ரோஹித் சர்மா 12 ரன்னில் ஆட்டமிழக்க, 4ம் நாள் ஆட்டத்தை முடித்த கில்லும் புஜாராவும் கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

கடைசி நாள் ஆட்டத்தில் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆக, அதை நன்கு பயன்படுத்திக்கொண்டார் இங்கிலாந்தின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சன். புஜாராவை பதினைந்து ரன்னில் ஜேக் லீச் வீழ்த்த, அரைசதம் அடித்த கில்லை சரியாக ஐம்பது ரன்களில் க்ளீன் போல்டாக்கி ஸ்டம்ப்பை கழட்டி எறிந்தார் ஆண்டர்சன். அதே ஓவரில் ரஹானேவின் ஸ்டம்ப்பையும் பிடுங்கி எறிந்து அவரை டக் அவுட்டாக்கி அனுப்பினார். ஒரே ஓவரில் ஷுப்மன் கில் மற்றும் ரஹானே ஆகிய 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய ஆண்டர்சன், ரிஷப் பண்ட்டையும் 11 ரன்னில் வீழ்த்தினார்.

அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், டோமினிக் பெஸ்ஸின் சுழலில் டக் அவுட்டானார். அதன்பின்னர் கோலியுடன் ஜோடி சேர்ந்த சீனியர் வீரர் அஷ்வின், ஆர்ச்சரின் பவுன்ஸர்களில் கையிலும் தலையிலும் அடிவாங்கினாலும், சமாளித்து ஆடி கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் உணவு இடைவேளைக்கு பின் 2வது செசனில் ஜாக் லீச்சின் சுழலில் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி நம்பிக்கையளித்த கோலி, ஸ்டோக்ஸின் பந்தில் போல்டானார். சென்னை ஆடுகளத்தில், கணிக்க முடியாதபடி பந்து பவுன்ஸ் ஆனது. சில பந்துகள் அதிகமாக பவுன்ஸ் ஆகின. சில பந்துகள் எகிறவே இல்லை. அப்படியான ஒரு பந்தில் தான், மிகவும் தாழ்வாக சென்ற பந்தில் கோலி 72 ரன்னில் போல்டாக, அதன்பின்னர் எஞ்சிய விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்தி இந்திய அணியை 192 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அணி, 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

click me!