கடந்த ஐபிஎல் சீசனில் ஏன் ஆடல..? உண்மையான காரணத்தை சொன்ன சீனியர் வீரர்

By karthikeyan VFirst Published Feb 8, 2021, 8:06 PM IST
Highlights

கடந்த ஐபிஎல் சீசனில் ஏன் ஆடவில்லை என்ற காரணத்தை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் முதல் சீசனிலிருந்து ஆடிவரும் அனுபவ சீனியர் வீரர்களில் ஒருவர், இந்தியாவின் முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். 10 சீசன்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய ஹர்பஜன் சிங்கை 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

2018, 2019 ஆகிய 2 சீசன்கள் சிஎஸ்கே அணியில் முக்கிய பங்குவகித்த ஹர்பஜன் சிங், 2020ம் ஆண்டு(13வது சீசன்) ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் நடந்த ஐபிஎல்லில் ஆடவில்லை.

தனிப்பட்ட காரணங்களுக்காக ஆடவில்லை என்று ஹர்பஜன் சிங் தெரிவித்திருந்தார். அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள நிலையில், 40 வயதான சீனியர் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கை கழட்டிவிட்டது சிஎஸ்கே அணி. அடுத்த சீசனுக்கான ஏலத்தில் தன்னை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஹர்பஜன் சிங்.

இந்நிலையில், கடந்த சீசனில் ஆடாததற்கான காரணம் குறித்து கிரிக்பஸ் இணையதளத்திடம் பேசிய ஹர்பஜன் சிங், அடுத்த ஐபிஎல் சீசனை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறேன். அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறேன். கடந்த சீசனில் நான் ஆடவேண்டும் என்றுதான் இருந்தேன். ஆனால் கொரோனா பெருந்தொற்றால் ஆடமுடியாமல் போயிற்று. என் குடும்பத்துடன் இருக்க வேண்டியிருந்தது. அதனால் கடந்த ஐபிஎல்லில் ஆடமுடியவில்லை. அது சரியான முடிவுதான்.

இன்னும் நிறைய கிரிக்கெட் என்னுள் இருக்கிறது. ஃபிட்னெஸிலும் கவனம் செலுத்தி முழு ஃபிட்னெஸுடன் தன இருக்கிறேன். லாக்டவுனில் முழுக்க முழுக்க ஃபிட்னெஸில் கவனம் செலுத்தினேன். அடுத்த சீசனின் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஆர்வமாக உள்ளேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
 

click me!