Harbhajan Singh: ஹர்பஜன் சிங்கும் காலத்தால் அழியாத சர்ச்சைகளும், அடிதடி சண்டைகளும்..!

By karthikeyan VFirst Published Dec 24, 2021, 4:52 PM IST
Highlights

ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் கெரியர் சர்ச்சைகளாலும் சண்டைகளாலும் நிரம்பிவழிந்தது. ஹர்பஜன் சிங் சம்மந்தப்பட்ட காலத்தால் அழியாத சர்ச்சைகளை பற்றி பார்ப்போம்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் 1998ம் ஆண்டு சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். கங்குலி மற்றும் தோனி தலைமையிலான இந்திய அணிகளில் முக்கிய அங்கம் வகித்தார். 1998லிருந்து 2016ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில்  ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

ஹர்பஜன் சிங்கின் கிரிக்கெட் கெரியர் சர்ச்சைகளும் சண்டைகளும் நிறைந்தது. அந்தவகையில், ஹர்பஜன் சிங் சம்மந்தப்பட்ட காலத்தால் அழியாத சர்ச்சை சம்பவங்களை பார்ப்போம்.

ஹர்பஜன் சிங்கும் காலத்தால் அழியாத சர்ச்சைகளும்!

ஹர்பஜன் சிங் - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மோதல்:

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பிரபலமான சர்ச்சைகளில் ஒன்று, ஹர்பஜன் - சைமண்ட்ஸ் மோதல். எதிரணி வீரர்களை களத்தில் வரையறையில்லாமல் ஸ்லெட்ஜ் செய்வதை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தியதும், அதில் கை தேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியர்கள். அவர்கள் செய்தால் நியாயம்; அதையே எதிரணி வீரர்கள் செய்தால் அதை பிரச்னையாக்குவதிலும் அவர்கள் வல்லவர்கள். 2007-08 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அப்படித்தான் அம்பயர்களின் தவறானா தீர்ப்புகள் விவகாரத்தை ஹர்பஜன் சிங்கின் பக்கம் மடைமாற்றம் செய்தனர்.

2007-08ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது. அந்த தொடரில் நடுவர்களின் தவறான முடிவுகளால் இந்திய அணி தொடரை இழக்க நேரிட்டது. அந்த தொடர் முழுவதும் 14 தீர்ப்புகள் இந்திய அணிக்கு எதிராக நடுவர்களால் வழங்கப்பட்டது. அதில் சுமார் 10 தவறான தீர்ப்புகள் சைமன்ட்ஸுக்கு சாதமாக வழங்கப்பட்டவை. சைமண்ட்ஸுக்கு 10 முறை அவுட் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், அந்த நேரத்தில் அம்பயரின் தவறான முடிவுகள் குறித்த சர்ச்சை கிளம்ப, அதை அடக்கும் விதமாக வேறு ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டனர் ஆஸ்திரேலிய வீரர்கள். அது சைமண்ட்ஸ் செய்த காரியம்தான். தன்னை ஹர்பஜன் சிங் மங்கி(குரங்கு) என்று அழைத்ததாக குற்றம்சாட்டினார். அப்படியொரு சம்பவம் நடந்ததா என்றே அறியாத  பாண்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன் மற்றும் கிளார்க் ஆகிய நால்வரும் சைமண்ட்ஸின் குற்றச்சாட்டை வழிமொழிந்து சாட்சி சொன்னார்கள். 

இந்த சர்ச்சை பூதாகரமாக வெடிக்க,வெடித்தது. இந்த பிரச்னையை சச்சின் தலையிட்டு சுமூகமாக முடித்துவைத்தார். ஒருவேளை இந்த பிரச்னை சுமூகமாக முடியவில்லை என்றால், தொடரை பாதியில் முடித்துக்கொண்டு இந்திய அணியை நாடு திரும்பச்செய்ய பிசிசிஐ தயாராக இருந்த நிலையில், அந்த பிரச்னையை முடித்துவிட்டது ஆஸ்திரேலியா. 

தன்னை ஒருமுறை மட்டுமல்ல; பலமுறை ஹர்பஜன் சிங் குரங்கு என்று திட்டியிருப்பதாகவும், தன்னை குரங்கு குரங்கு என்று திட்டியே தனது கிரிக்கெட் கெரியரையே ஹர்பஜன் முடித்துவிட்டதாகவும் சைமண்ட்ஸ் பல நேரங்களில் கூறியிருக்கிறார். ஆனால் குடி மற்றும் ஒழுங்கீன செயல்பாடுகளின் காரணமாகத்தான் சைமண்ட்ஸ் ஆஸ்திரேலிய அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார் என்பதே உண்மை.

ஹர்பஜன் - முகமது யூசுஃப் மோதல்:

2003 உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய போட்டி தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியனில் நடந்தது. அந்த போட்டியில் ஹர்பஜன் ஆடவில்லை. கும்ப்ளே தான் ஆடினார். அந்த போட்டிக்கு முன்னதாக ஹர்பஜன், டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத் ஆகிய நால்வரும் ஒன்றாக சாப்பிட சென்றபோது, இவர்கள் அமர்ந்த இருக்கைக்கு பின்னால் அன்வர், வாசிம் அக்ரம், அக்தர், முகமது யூசுஃப் ஆகியோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

அப்போது ஹர்பஜன் விளையாட்டாக பேச ஆரம்பித்திருக்கிறார். ஆனால் முகமது யூசுஃப் ஹர்பஜனை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருக்கிறார். அக்தரிடம் தன்னை பற்றி தவறாக பேசியது மட்டுமல்லாமல் தனது மதத்தை பற்றியும் இழிவாக யூசுஃப் பேசியதை கேட்டு, கடும் கோபமடைந்த ஹர்பஜன், யூசுஃபின் காலை பிடித்து இழுத்தார். அவரும் ஹர்பஜனின் காலை பிடித்து இழுக்க, இருவரும் சண்டைக்கு எழுந்தார்கள். ஹர்பஜன் ஃபோர்க்கை எடுத்துக்கொண்டு யூசுஃபை தாக்குவதற்காக செல்ல,  அவரும் ஃபோர்க்கை எடுத்துக்கொண்டு சண்டைக்கு வந்தார். இதையடுத்து உடனடியாக யூசுஃபை அன்வரும் அக்ரமும் இணைந்து வெளியே அழைத்து சென்றார்கள். ஹர்பஜனை டிராவிட்டும் ஸ்ரீநாத்தும் அமைதிப்படுத்தி அமரவைத்தார்கள். டிராவிட்டும் ஸ்ரீநாத்தும் யூசுஃப் பேசியது தவறு என்றும் சரியான நடத்தை அல்ல என்றும் எச்சரித்தனர். இந்த சம்பவத்தை ஹர்பஜன் சிங்கே ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்தார். பின்னர் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஹர்பஜனும் யூசுஃபும் நேருக்கு நேர் சந்தித்தபோது, இச்சம்பவத்தை  நினைத்து சிரித்துக்கொண்டது தனிக்கதை.

ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் மோதல்:

 2008ல் ஐபிஎல் தொடங்கிய முதல் சீசனில் ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஆடினார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி ஜெயித்தது. இதையடுத்து ஹர்பஜன் சிங்கை ஸ்ரீசாந்த் ஏதோ நக்கலடிக்க, செம கடுப்பான ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் விளைவாக, அதன்பின்னர் அந்த தொடர் முழுவதும் ஆட ஹர்பஜன் சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அந்த விரும்பத்தகாத சம்பவத்தை அன்றிரவே சச்சின் டெண்டுல்கர் முடித்துவைத்தார். ஹர்பஜன் - ஸ்ரீசாந்த் ஆகிய இருவரையும் அழைத்து சமாதானப்படுத்தி வைத்தார் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!