சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 18ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹோம் மைதானத்தில் நடைபெற்று வரும் 18ஆவது லீக் போட்டியிலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். எனினும் ரச்சின் ரவீந்திரா 12 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களில் ஷாபாஸ் அகமது பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அதன் பிறகு அஜிங்க்யா ரஹானே மற்றும் சிக்ஸர் மன்னர் ஷிவம் துபே இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஷிவம் துபே 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இதே போன்று ரஹானே 35 ரன்களில் நடையை கட்டினார்.
இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரில் மிட்செல் இருவரும் இணைந்து ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். எனினும், ஒரு சில பவுண்டரி விளாசினர். முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கே 2 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் மிட்செல் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக தோனி களமிறங்கினார். அவர், 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். கடைசி பந்தில் ரவீந்திர ஜடேஜா பவுண்டரி அடிக்க சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது.
இதில், ஜடேஜா 23 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் சிஎஸ்கே 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. பவுலிங்கைப் பொறுத்த வரையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது, ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.