பும்ரா இடத்துல வேற யாரா இருந்தாலும் கோபம்தான் வந்துருக்கும்.. ஆனால் பும்ரா கிரேட்!! அனைவரையும் கவர்ந்த பும்ராவின் கேரக்டர்

By karthikeyan VFirst Published May 13, 2019, 12:26 PM IST
Highlights

ஐபிஎல் இறுதி போட்டியில் கடும் நெருக்கடியில் இருந்தபோதும் பும்ராவின் செய்த செயல் ஒன்று அனைவரையும் கவர்ந்தது. பும்ராவின் சிறந்த கேரக்டரை அந்த சம்பவம் வெளிப்படுத்தியது. 
 

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி வெறும் 149 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், 150 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சிஎஸ்கே அணியை தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

இந்த வெற்றிக்கு பும்ராவின் பவுலிங் மிக முக்கியமான காரணம். டெத் ஓவர்களை வீச மும்பை இந்தியன்ஸிடம் பும்ரா இருப்பதுதான் அந்த அணியின் பலமே. எதிரணிக்கு அதிக ரன்களை விட்டுக்கொடுக்கும் மும்பை அணியின் ஒவ்வொரு ஓவருக்கு பின்னரும் பும்ரா வந்து அப்படியே ரன்ரேட்டை கட்டுப்படுத்திவிடுவார். 

நேற்றைய இறுதி போட்டியில் 16வது ஓவரில் மலிங்கா, 20 ரன்களை விட்டுக்கொடுக்க, 17வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பும்ரா. மீண்டும் க்ருணல் வீசிய 18வது ஓவரில் 20 ரன்களை வாரி வழங்க, அடுத்த ஓவரில் வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார் பும்ரா. அதுவும் 5 ரன்களில் முடிந்திருக்க வேண்டிய ஓவர். ஆனால் அந்த ஓவரின் கடைசி பந்தை குயிண்டன் டி காக் கையில் பிடிக்காமல் விட, அது பவுண்டரிக்கு ஓடியது. அதனால்தான் அந்த ஓவரில் 9 ரன்கள் போனது. பவுலர் அபாரமாக வீசியும் விக்கெட் கீப்பர் விட்டதால் பவுண்டரி போனால் எந்தவொரு பவுலருக்கும் கோபம் வரும். 

அதனால் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்படும் சூழல் உருவானது. அதனால் கண்டிப்பாக எந்த பவுலருக்குமே அந்த சூழலில் கோபம் வந்திருக்கும். ஆனால் பும்ராவோ, குயிண்டன் டி காக்கிடம் சென்று இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்; பரவாயில்லை என்று ஆறுதல் கூறி டி காக்கை தேற்றிவிட்டு சென்றார். அந்த சூழலில் டி காக்கிற்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் போன பவுண்டரியை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் டி காக் அடுத்த ஓவரிலும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். பந்தை பவுண்டரிக்கு விட்ட மன அழுத்தத்தில் அவர் இருந்தால் கடைசி ஓவரில் சிறப்பாக செயல்பட முடியாது.

எனவே டி காக்கிற்கு ஆதரவாக ஆறுதல் கூறினார் பும்ரா. ஒரு அணியாக ஆடும் விளையாட்டுகளில் தனிநபர் மீது குற்றச்சாட்டுகளை வைக்காமல் இதுபோன்று பரஸ்பரம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் செயல்படுவதுதான் சிறந்தது. அந்த விஷயத்தில் பும்ரா சூப்பர். மேலும் அந்த நெருக்கடியான சூழலிலும் தன் மீது தவறு இல்லாதபோதிலும் 4 ரன்கள் போனதற்கு கோபப்படாமல் சக வீரருக்கு தோள் கொடுத்தார் பும்ரா.
 

click me!