ரோஹித் சர்மாவின் அபாரமான கேப்டன்சி.. இந்த தைரியம்லாம் வேற யாருக்குமே வராது

By karthikeyan VFirst Published May 13, 2019, 11:05 AM IST
Highlights

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் ஐபிஎல்லில் மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முக்கியமான காரணம். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், நெருக்கடியான சூழலில் தீட்டும் திட்டங்கள் என அனைத்திலுமே ரோஹித் சிறப்பாக செயல்படக்கூடியவர். 
 

ரோஹித் சர்மா தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். 

ஐபிஎல் 12வது சீசனிலும் டைட்டிலை வென்று நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. நான்கு முறையுமே ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் ஐபிஎல்லில் மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முக்கியமான காரணம். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், நெருக்கடியான சூழலில் தீட்டும் திட்டங்கள் என அனைத்திலுமே ரோஹித் சிறப்பாக செயல்படக்கூடியவர். 

நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று மோதின. இந்த போட்டியில் வெறும் 150 ரன்களைத்தான் சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். ஆனாலும் அதை எடுக்கவிடாமல் தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். 

இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் அபாரமாக பவுலர்களை மாற்றி பந்துவீச வைத்தார். 15 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி வெறும் 88 ரன்கள்தான் அடித்திருந்தது. மலிங்கா வீசிய 16வது ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை குவித்தார் வாட்சன். அந்த ஓவர் சிஎஸ்கே அணிக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது. எனினும் அந்த பெரிய ஓவருக்கு பின்னரும் நம்பிக்கையை தளரவிடாத மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, அடுத்த ஓவரை பும்ராவிடம் கொடுத்து ஸ்கோரை கட்டுப்படுத்தினார்.

பும்ரா 17வது ஓவரில் வெறும் 4 ரன்களே கொடுக்க, 18வது ஓவரை வீசிய க்ருணல் பாண்டியா, அந்த ஓவரில் மீண்டும் 20 ரன்களை வழங்கினார். அதன்பின்னர் மீண்டும் ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 19வது ஓவரை அபாரமாக வீசிய பும்ரா, அந்த ஓவரில் பிராவோவை வீழ்த்தியதோடு முதல் 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி பந்தை அபாரமாக வீச, ஆனால் அதை விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் பிடிக்காமல் விட்டதால் பவுண்டரி சென்றது. 

இதையடுத்து கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு தேவைப்பட்டது. இப்படியான நெருக்கடியான சூழலில், கடைசி ஓவரை ரோஹித் சர்மா யாரிடம் கொடுக்கப்போகிறார் என்ற பெரும் கேள்வி எழுந்தது. மலிங்காவிற்கு கடைசி ஓவர் மீதமிருந்தாலும், அவரது மூன்றாவது ஓவரில் வாட்சன் 20 ரன்கள் அடித்தார். அதனால் மீண்டும் மலிங்காவிடம் கொடுப்பாரா? அல்லது ஹர்திக்கை வீசவைப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. 

மும்பை அணியின் நட்சத்திர மற்றும் அனுபவ பவுலரான மலிங்காவின் மீது நம்பிக்கை வைத்து கடைசி ஓவரை மலிங்காவிடமே கொடுத்தார் ரோஹித். தனது அனுபவத்தை பயன்படுத்தி அந்த ஓவரை அபாரமாக வீசினார். முதல் 4 பந்துகளில் 5 ரன்கள் எடுக்கப்பட்டதோடு, வாட்சனும் ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 2 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் ஷர்துல் தாகூர் 2 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் ஓடினால் கூட போட்டி டிரா ஆகிவிடும். இப்படியொரு நெருக்கடியான சூழலில் மலிங்கா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. கடைசி பந்தில் விக்கெட்டை வீழ்த்தி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார் மலிங்கா.

மலிங்கா அவரது மூன்றாவது ஓவரில் 20 ரன்களை வழங்கியதால், கடைசி ஓவரை அவரிடமே ரோஹித் கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மலிங்காவின் அனுபவத்தின் மீதும் அவரது திறமையின் மீதும் நம்பிக்கை வைத்து அவரிடமே கொடுத்தார் ரோஹித். அந்த நம்பிக்கையை மலிங்காவும் வீணடிக்கவில்லை. இதுமாதிரியான நம்பிக்கையை வீரர்கள் மீது ஒரு கேப்டனாக தோனி எப்போதுமே வைப்பார். அவருக்கு அடுத்து ரோஹித் சர்மாதான் அதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுக்கிறார். 

வேறு யாராவதாக இருந்திருந்தால், மலிங்கா முந்தைய ஓவரில் 20 ரன்கள் வழங்கியதால், அவருக்கு கடைசி ஓவரை கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம். ஏனெனில் அவரது முந்தைய ஓவரை அடித்து நொறுக்கிய வாட்சன் தான் கடைசி ஓவரில் களத்தில் இருந்தார். ஆனாலும் மலிங்காவின் மீதான நம்பிக்கையில் தைரியமாக அவரிடமே கொடுத்தார் ரோஹித். அவர் ஒரு மேட்ச் வின்னர் என்பது ரோஹித்துக்கு தெரியும். 
 

click me!