பாக்., - ஆஸி., மோதும் அரையிறுதியில் கண்டிப்பா இந்த அணி தான் ஜெயித்து ஃபைனலுக்கு செல்லும்..! லாரா அதிரடி ஆருடம்

By karthikeyan VFirst Published Nov 11, 2021, 3:11 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பிரயன் லாரா ஆருடம் தெரிவித்துள்ளார்.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி ஃபைனலுக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இன்று துபாயில் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் வரும் 14ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளுமே இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ளன. இரு அணிகளுமே, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் ஒன்றுக்கு ஒன்று சளைத்த அணி அல்ல என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இதுவரை இந்த 2 அணிகளும் மோதிய டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி 13 முறையும், ஆஸ்திரேலிய அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகளில், இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை பாகிஸ்தான் அணி தோற்றதேயில்லை.

பாகிஸ்தான் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் இப்போது ஃபைனலுக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து ஆகிய 2 வலுவான அணிகளையே வீழ்த்திவிட்டுத்தான் அரையிறுதிக்கு வந்திருக்கிறது. பாபர் அசாம் செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவருகிறார். முகமது ரிஸ்வான் பாகிஸ்தானுக்கு தேவையான அதிரடி தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார். முகமது ஹஃபீஸ் நல்ல ஃபார்மில் ஓரளவிற்கு பங்களிப்பு செய்துவருகிறார். ஷோயப் மாலிக் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 18 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவரும் செம ஃபார்மில் இருக்கிறார். ஆசிஃப் அலி தனது ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்கிறார்.

இப்படியாக பேட்டிங்கில் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என இரண்டுமே சிறப்பாக உள்ளது. பவுலிங்கை பொறுத்தமட்டில், ஃபாஸ்ட் பவுலிங்கில் ஷாஹீன் அஃப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். ஹசன் அலியின் அனுபவமும் பலம் சேர்க்கும். ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கானும், இமாத் வாசிமும் அசத்திவருகின்றனர். பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் தரமும் பன்மடங்கு மேம்பட்டிருக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணி சிறந்து விளங்குகிறது.

ஆஸ்திரேலிய அணியும் சளைத்தது அல்ல. பேட்டிங்கில் டேவிட் வார்னர் ஃபார்முக்கு வந்திருப்பது மிகப்பெரிய பலம். மிட்செல் மார்ஷும் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். ஸ்மித் மிடில் ஆர்டருக்கு வலுசேர்க்கிறார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், மேத்யூ வேட் மிடில் ஆர்டரிலும், டெத் ஓவர்களிலும் அடித்து ஆடவல்லவர்கள். பவுலிங்கில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் காம்பினேஷன் பட்டைய கிளப்பிவருகிறது. ஸ்பின்னில் ஆடம் ஸாம்பா அருமையாக வீசிவருகிறார்.

எனவே இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகளாக திகழும் நிலையில், இந்த 2 அணிகளில் எந்த அணி வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ள நிலையில், இதுகுறித்த தனது கணிப்பை தெரிவித்துள்ளார் பிரயன் லாரா.

இதுகுறித்து டுவீட் செய்துள்ள பிரயன் லாரா, எனது கணிப்பு பாகிஸ்தான் தான் ஜெயிக்கும். ஆஸ்திரேலியா மிகவும் அபாயகரமான அணி. அவர்களிடம் வலுவான பேட்டிங் ஆர்டர் உள்ளது. ஆஸ்திரேலிய அணியால் எந்த அணியையும் வீழ்த்த முடியும். ஆனால் பாகிஸ்தான் அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டுமே அபாரமாக உள்ளது. எனவே பாகிஸ்தான் தான் ஃபைனலுக்கு செல்லும் என்று லாரா கணித்துள்ளார்.
 


My Prediction - is a very dangerous team. They've got a strong lineup that can beat anyone. But Pakistan has the bowling & batting prowess to keep them at bay & make the finals.
-
Win my signed bats at https://t.co/mxSy58OXLI

— Brian Lara (@BrianLara)

இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டியில் கூட,நியூசிலாந்து தான் ஜெயிக்கும் என்ற லாராவின் கணிப்பு அப்படியே நடந்தது குறிப்பிடத்தக்கது.

click me!