ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிய அந்த முடிவு ராகுல் டிராவிட் எடுத்தது தான்..! புவனேஷ்வர் குமார் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jul 21, 2021, 8:31 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தனக்கு முன்பாக தீபக் சாஹரை பேட்டிங் இறக்கிவிட்டது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
 

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ஷிகர் தவானின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது.

நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. 276 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 193 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் தீபக் சாஹரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் அவருக்கு புவனேஷ்வர் குமார் கொடுத்த ஒத்துழைப்பால் இந்திய அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

வெற்றி பெற வேண்டிய இந்த போட்டியில் தீபக் சாஹரின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் தோல்வியை தழுவியது இலங்கை அணி. தீபக் சாஹர் 69 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

ராகுல் டிராவிட் தன் மீது வைத்த நம்பிக்கையாலும், தனக்கு கொடுத்த அறிவுரை மற்றும் ஆதரவாலும் தான் தன்னால் நன்றாக பேட்டிங் ஆட காரணமாக இருந்ததாக தீபக் சாஹர் போட்டிக்கு பின் தெரிவித்திருந்தார்.

ஓரளவிற்கு நன்றாக பேட்டிங் ஆடத்தெரிந்த மற்றும் சர்வதேச போட்டிகளில் பேட்டிங் ஆடிய அனுபவமும் கொண்டவர் புவனேஷ்வர் குமார். நெருக்கடியான சூழலில் புவனேஷ்வர் குமாருக்கு முன்பாகவே தீபக் சாஹர் இறக்கப்பட்ட நிலையில், அந்த முடிவு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்தது தான் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய புவனேஷ்வர் குமார், போட்டியை முடிந்தவரை கடைசி பந்து வரை எடுத்துச்சென்றால், இலக்கை எட்டிவிடலாம் என்பதுதான் எங்கள் நோக்கம். தீபக் சாஹர் அருமையான பேட்டிங் ஆடினார். தீபக் சாஹர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் இந்தியா ஏ அணியிலும் மற்றும் மற்ற சில தொடர்களிலும் ஆடியிருக்கிறார். எனவே தீபக் சாஹரால் எந்தளவிற்கு பேட்டிங் ஆடமுடியும் என்று ராகுல் டிராவிட்டுக்கு நன்கு தெரியும். எனவே எனக்கு முன்பாக தீபக் சாஹரை இறக்கிவிட்டது ராகுல் டிராவிட்டின் முடிவுதான் என்று புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
 

click me!