யாரை கேட்டு அங்க போனீங்க..? இதுக்கு நீங்க பதில் சொல்லியே தீரணும்.. சாஸ்திரி, கோலி மீது பிசிசிஐ செம கடுப்பு

By karthikeyan VFirst Published Sep 7, 2021, 5:21 PM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது.
 

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. 5வது டெஸ்ட் வரும் 10ம் தேதி மான்செஸ்டாரில் தொடங்குகிறது.

4வது டெஸ்ட் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மூவருடன் ஃபிசியோ நிதின் படேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பயிற்சியாளர்கள், கோலி உள்ளிட்ட சில வீரர்கள் லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

கொரோனா விதிமுறைகளை மீறி வெளியே சுற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டபோதும், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் சிலர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதை அறிந்த பிசிசிஐ அவர்கள் மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலியிடம் பிசிசிஐ விளக்கம் கேட்கவுள்ளது. இந்த விவகாரத்தில் அணி நிர்வாக மேலாளர் கிரிஷ் டோங்ரேவில் பங்களிப்பு என்ன என்பதையும் பிசிசிஐ விசாரிக்கவுள்ளது. 

டி20 உலக கோப்பைக்கான அணி தேர்வு குறித்து ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 7ம் தேதி நடக்கிறது. அதில், இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று தெரிகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மூவருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியை எந்தவித சிக்கலும் இல்லாமல் நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ ஆலோசித்துவருகிறது.
 

click me!