IND vs NZ 3rd T20: மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பாராட்டு விழா!

By Rsiva kumarFirst Published Jan 31, 2023, 8:01 PM IST
Highlights

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டி தொடங்குவதற்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பறிய இந்திய மகளிர் அணியை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
 

தென் ஆப்பிரிக்காவில் மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பை தொடர் நடந்தது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன.விறுவிறுப்பாக சென்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. 

இந்திய அண்டர்19 மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா (கேப்டன்), ஷ்வேதா செராவத், சௌமியா திவாரி, கொங்காடி த்ரிஷா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ரிஷிதா பாசு, டைட்டஸ் சாது, மன்னத் காஷ்யப், அர்ச்சனா தேவி, பார்ஷவி சோப்ரா, சோனம் யாதவ்.

இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து அண்டர் 19 மகளிர் அணி 17.1 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிகவும் எளிய இலக்கை விரட்டிய இந்திய அண்டர் 19 மகளிர் அணி 14ஆவது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அது மட்டுமின்றி, முதல் முறையாக அண்டர் 19 மகளிர் அணிக்காக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை இந்தியா அண்டர் 19 மகளிர் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக இந்தியா அண்டர் 19 ஆண்கள் அணியும் இதே போன்று முதல் முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக தொடங்கப்பட்ட மகளிர் அண்டர் 19 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணி மற்றும் துணை ஊழியர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கபட்டது. உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கிரிக்கெட் பிரபலங்களான ராகுல் டிராவிட், பிரித்வி ஷா ஆகியோர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாளை மாலை 7 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய மகளிர் அண்டர் 19 அணிகளை கௌரவப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்தியா அண்டர் 19 மகளிர் அணி மற்றும் துணை ஊழியர்கள் அனைவரையும் நாளை பிப்ரவரி 1 ஆம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில், இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இளம் கிரிக்கெட் வீராங்கனைகளின் சாதனைகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கரும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

click me!