ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து இந்தியா அணியானது ஜிம்பாப்வே மற்றும் இலங்கை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் கட்டமாக இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று மும்பையிலிருந்து ஜிம்பாப்வே புறப்பட்டனர். இது தொடர்பான புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா, அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, ரியான் பராக், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
மேலும், நிதிஷ் ராணா காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அணியில் இடம் பெற்றார். இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்குப் பதிலாக மாற்று வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதன்படி, சாய் சுத்ர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் 2 டி20 போட்டிகளில் மட்டும் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இடம் பெறமாட்டார்கள். அதன்பிறகு எஞ்சிய 3 டி20 போட்டிகளில் இந்த மூவரும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதில் ஷிவம் துபே மட்டும் பிளேயிங் 11ல் விளையாடினார். சஞ்சு சாம்சன் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற நிலையில் பார்படாஸில் பெரில் என்ற புயல் தாக்கம் ஏற்பட்டு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் பார்படாஸிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு இன்னும் நிலைமை சரியாகாத நிலையில், இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பவில்லை.
இன்று இரவு இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், ஜிம்பாப்வே தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்குப் பதிலாக சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் 2 டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் ராணா.