தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச்.. பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Aug 19, 2020, 9:03 PM IST
Highlights

தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை(2011), சாம்பியன்ஸ் டிராபி(2013) ஆகிய 3 ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. அவர் இந்திய அணிக்காக  கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என ஒரு முழுமையான கிரிக்கெட்டராக அனைத்துவகையிலும் தனது பங்களிப்பை வழங்கினார்.

2004ம் ஆண்டிலிருந்து 2019ம் ஆண்டுவரை 15 ஆண்டுகள் இந்திய அணியில் ஆடிய தோனி, 2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரையிறுதியில் தான் கடைசியாக ஆடினார். அதன்பின்னர் ஓராண்டாக எந்தவிதமான போட்டிகளிலும் ஆடாமல் இருந்த தோனி, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

தோனி ஃபேர்வெல் போட்டியில் ஆடாமல் திடீரென ஓய்வு பெற்றதையடுத்து, அவர் மீண்டும் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி ஆடுவதைக்காண ஆவலாய் இருந்த ரசிகர்கள், அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. 

இந்திய கிரிக்கெட்டிற்கு அபரிமிதமான பங்களிப்பை வழங்கியிருக்கும் தோனிக்கு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்று முன்னாள், இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். 

இந்நிலையில், தோனிக்கு ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்வதே பிசிசிஐயின் நோக்கம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் ஆங்கில பத்திரிகையான நியூ இந்தியன் எக்ஸ்பிரஸூக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அந்த பிசிசிஐ அதிகாரி, இப்போதைக்கு சர்வதேச தொடர்கள் எதுவும் இந்திய அணிக்கு இல்லை. ஐபிஎல்லுக்கு பின் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தோனி இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைக்கப்பட வேண்டியவர் தோனி. அவருக்கான ஃபேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் பிசிசிஐயின் விருப்பம். ஆனால் தோனி வித்தியாசமான வீரர். யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் ஓய்வை அறிவித்தார் தோனி. 

தோனியிடம் ஃபேர்வெல் போட்டி குறித்து பேசவில்லை. ஐபிஎல்லின்போது தோனியிடம் பேசுவோம். அப்படி ஃபேர்வெல் போட்டி நடத்தினால், எந்த ஊரில் ஆட விரும்புகிறார் என்பதை கேட்டுத்தான் முடிவு செய்யப்படும். தோனி ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அவருக்கான மரியாதை பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

click me!