ரெய்னாவை கொஞ்சம் கரிசனத்துடன் கையாண்டிருக்கலாம்..! முன்னாள் வீரர் வருத்தம்

By karthikeyan VFirst Published Aug 19, 2020, 7:36 PM IST
Highlights

சுரேஷ் ரெய்னாவை ஓய்வு முடிவுக்கு தூண்டாத வகையில், அவரை இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் கொஞ்சம் பொறுப்புடன் கையாண்டிருக்கலாம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 
 

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, தோனியை தொடர்ந்து ஓய்வு அறிவித்தார். 33 வயதே ஆன ரெய்னாவின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. 

2005ம் ஆண்டு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் அறிமுகமான சுரேஷ் ரெய்னா, அதன்பின்னர் தோனியின் கேப்டன்சியில் அவரது ஆஸ்தான வீரராகவும் நெருங்கிய நண்பராகவும் இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் ஜொலித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரெய்னா சோபிக்காததால், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார். 

சுரேஷ் ரெய்னா, இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5615 ரன்களையும் 78 டி20 போட்டிகளில் ஆடி 1605 ரன்களையும் விளாசியுள்ளார். வெறும் 18 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். ரெய்னா நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த ஃபீல்டரும் கூட. ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரும், ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழ்பவரான ஜாண்டி ரோட்ஸுக்கே மிகவும் பிடித்த ஃபீல்டர் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது. 

யுவராஜ் சிங், கைஃப் ஆகியோர் செட் செய்திருந்த இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர் ரெய்னா. 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். அந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், ரெய்னாவின் பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கே சென்றது. 

ரெய்னா இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்துவந்த நிலையில், 2015-2016 காலக்கட்டத்தில் ஓரங்கட்டப்பட்ட ரெய்னா, அதன்பின்னர் இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்க முடியவில்லை. 2018ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து தொடரில் ஆடிய ரெய்னா, அதில் சரியாக ஆடாததால் மீண்டும் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு மீண்டும் அணியில் இடம் கிடைக்கவில்லை. இனிமேல் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து ரெய்னா ஓய்வு அறிவித்தார். 

இந்நிலையில், ரெய்னாவின் ஓய்வு குறித்து தனது யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சுரேஷ் ரெய்னாவுக்கு 33 வயதுதான். ஆனால் ஓய்வறித்துவிட்டார். அண்மையில் அளித்த பேட்டியில் கூட, இந்திய அணியில் மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியிருப்பதாகவும் அதற்காக தீவிரமாக தயாராகிவருவதாகவும் ரெய்னா தெரிவித்தார். ஆனால் திடீரென ஓய்வு அறிவித்துவிட்டார். ரெய்னாவை இனும் கொஞ்சம் பொறுப்புடனும் கரிசனத்துடனும் கையாண்டிருக்கலாம். அவர் 2018ல் கம்பேக் கொடுத்தபோது கூட, அவர் ஆடிய 3 போட்டிகளில் ஒன்றில் 40-50 ரன்கள் அடித்தார். மற்றொரு போட்டியில் நாட் அவுட். ஒரேயொரு போட்டியில் மட்டுமே விரைவில் ஆட்டமிழந்தார். எனவே அவரை இன்னும் கொஞ்சம் நன்றாக நடத்தியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 

click me!