இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வாளர்கள் மொத்தமாக நீக்கப்பட்டுள்ளனர். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது.
டி20 உலக கோப்பை தோல்விக்கு அணி தேர்வு சரியில்லாததும் ஒரு காரணம் என விமர்சிக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷாவை தேர்வு செய்யாததும் விமர்சனத்துக்குள்ளானது. டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் ஆக்ரோஷமான பேட்டிங்கை இந்திய அணி ஆடவேண்டும். இந்திய அணியின் அணுகுமுறையை கண்டிப்பாக மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது .அப்படியிருக்கையில், இயல்பாகவே அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்கவல்ல பிரித்வி ஷாவை அணியில் எடுக்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு முன் இந்திய அணியில் இடம்பிடித்த, திறமையான வீரரான பிரித்வி ஷாவை தேர்வு செய்யாதது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் ஐபிஎல்லை அடிப்படையாக வைத்து அணி தேர்வு செய்ததும் சர்ச்சைக்குள்ளானது. கடந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் வருண் சக்கரவர்த்தியை எடுத்தது, இந்த டி20 உலக கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஆகிய தேர்வுகள் ஐபிஎல்லின் அடிப்படையில் அமைந்தது.
ஐபிஎல் அடிப்படையில் இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது சரியான முறையல்ல என்று விமர்சனங்கள் வலுத்தன. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஒருநாள் உலக கோப்பை, 2024 டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களுக்கான அணிகளை இப்போதிருந்தே கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் நிலையில், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தேர்வாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 7 சர்வதேச டெஸ்ட் & 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகள் & 20 முதல் தர போட்டிகளில் ஆடிய, 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
டி20 உலக கோப்பையில் ரோஹித்தும் டிராவிட்டும் சாஹலை ஆடவைக்காதது ஏன்..? தினேஷ் கார்த்திக் விளக்கம்
மதன் லால் தலைமையில் ஆர்பி சிங், சுலக்ஷனா நாயக் ஆகியோர் புதிய தேர்வாளர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.