பஞ்சாப்பை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய பரோடா..! ஃபைனலில் தமிழ்நாடு vs பரோடா மோதல்

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 10:41 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் 2வது அரையிறுதியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பரோடா அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2வது அரையிறுதி போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி பரோடா ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது.

அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய பரோடா அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேதார் தேவ்தர் பொறுப்புடன் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த கேப்டன் கேதார் 64 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கார்த்திக் ககடே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து அணியை கரைசேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற கார்த்திக் ககடே, 53 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் பரோடா அணி 160 ரன்கள் அடித்தது.

161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. குர்கீரத் மன் சிங் 39 ரன்களும், கேப்டன் மந்தீப் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 ரன்களும் அடித்தனர். மந்தீப் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றாலும், மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருவர் கூட ஆடாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால், 20 ஓவரில் பஞ்சாப் அணி 135 ரன்கள் மட்டுமே அடித்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பரோடா அணி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. நாளை மறுநாள்(31ம் தேதி) அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள ஃபைனலில் வலுவான தமிழ்நாடு அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி.
 

click me!