#BBL அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸை அடித்து காலி செய்து நாக் அவுட்டுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட்

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 8:00 PM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் எலிமினேட்டர் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி நாக் அவுட்டுக்கு முன்னேறியது பிரிஸ்பேன் ஹீட் அணி.
 

பிக்பேஷ் லீக் தொடரின் எலிமினேட்டர் போட்டி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி, 20 ஓவரில் 130 ரன்கள் மட்டுமே அடித்தது.

அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியில் அதிகபட்சமாக, தொடக்க வீரர் வெதரால்டு 32 ரன்கள் அடித்தார். அலெக்ஸ் கேரி 13 ரன்களும், கேப்டன் டிராவிஸ் ஹெட் 12 ரன்களும் மட்டுமே அடித்தனர். ஃபிலிப் சால்ட் 26 ரன்கள் அடித்தார். வெல்ஸ் 20 ரன்கள் அடித்தார். யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாததால் 20 ஓவரில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி வெறும் 130 ரன்கள் மட்டுமே அடித்தது. 

பிரிஸ்பேன் ஹீட் அணி சார்பில் அதிகபட்சமாக லபுஷேன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 131 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கிறிஸ் லின்  மற்றும் நட்சத்திர வீரர் லபுஷேன் ஆகிய இருவருமே தலா ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான ஜோ டென்லி பொறுப்புடன் ஆடி 41 ரன்கள் அடித்தார். ஜிம்மி பியர்சன் பொறுப்புடன் ஆடி 44 பந்தில் 47 ரன்கள் அடித்து பிரிஸ்பேன் ஹீட் அணியை வெற்றி பெற செய்தார். இலக்கு எளிதானது என்பதால் முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொற்பமான ரன்னில் ஆட்டமிழந்தபோதிலும், பியர்சன் நிதானமாக ஆடினாலும் கூட இலக்கை எட்டி பிரிஸ்பேன் ஹீட் அணி வெற்றி பெற முடிந்தது.

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு பிரிஸ்பேன் ஹீட் அணி முன்னேறியுள்ளது. நாக் அவுட்டில் சிட்னி தண்டரை எதிர்கொள்கிறது பிரிஸ்பேன் ஹீட் அணி. நாக் அவுட்டில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும்.

சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டி நாளை நடைபெறும். அதில் வெல்லும் அணியும் நாக் அவுட்டில் தோற்கும் அணியும் சேலஞ்சர் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் அணி ஃபைனலுக்கு முன்னேறும்.

click me!