#PAKvsSA முதல் டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி..! ஆட்டநாயகன் ஆலம்

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 4:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
 

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கராச்சியில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் மட்டும் அரைசதம் அடித்தார். எல்கர் 58 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தவிர வேறு எந்த தென்னாப்பிரிக்க வீரருமே சரியாக ஆடவில்லை. அணியின் சீனியர் வீரர் டுப்ளெசிஸ்(23), கேப்டன் டி காக்(15), வாண்டெர் டசன்(17) என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டெம்பா பவுமா ஓரளவிற்கு ஆடி 35 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அடித்து ஆடி 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ரபாடா 21 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 220 ரன்களுக்கு சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி(4) மற்றும் இம்ரான் பட்(9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கேப்டன் பாபர் அசாம் 7 ரன் மட்டுமே அடித்தார். அசார் அலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அரைசதத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் 51 ரன்னிலேயே அசார் அலி ஆட்டமிழந்தார்.

176 ரன்களுக்கு பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட்டுகளை இழக்க, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஃபவாத் ஆலம் பொறுப்புடன் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ஃபவாத் ஆலம் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஃபவாத் ஆலமுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிய ஃபஹீம் அஷ்ரஃப், 64 ரன்கள் அடித்தார்.

பாகிஸ்தானின் டெயிலெண்டர்கள் அனைவருமே ஓரளவிற்கு ஸ்கோர் செய்ததால், முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி  378 ரன்களை குவித்தது. பாகிஸ்தானின் டெய்லெண்டர்கள் யாசிர் ஷா(38), நௌமன் அலி(24), ஹசன் அலி(21) ஆகிய மூவருமே சிறப்பாக ஆடினர்.

158 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள், 2வது இன்னிங்ஸிலும் சொதப்பினர். கடந்த முறை தொடக்க வீரர் எல்கர் அரைசதம் அடிக்க, இந்த முறை அவரது ஓபனிங் பார்ட்னர் மார்க்ரம் அரைசதம் அடித்தார். மார்க்ரம் 74 ரன்களும், 3ம் வரிசையில் இறங்கி அரைசதம் அடித்த வாண்டெர் டசன் 64 ரன்களும் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் டுப்ளெசிஸ்(10), கேப்டன் டி காக்(2) என மீண்டும் சொதப்ப, பவுமா 40 ரன்கள் அடித்தார். டெயிலெண்டர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா சுருண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் நௌமன் அலி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி வெறும் 87 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற, 88 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்டை மட்டுமே இழந்து அந்த இலக்கை அடிக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்ஸில் சதமடித்து பாகிஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஃபவாத் ஆலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

click me!