டெத் ஓவரில் செம கெத்து காட்டிய தமிழ்நாடு பவுலர்கள்..! ஃபைனலுக்கு முன்னேற சவாலான இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 1:50 PM IST
Highlights

சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற, அரையிறுதியில் தமிழ்நாட்டிற்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் அணி.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரின் முதல் அரையிறுதி போட்டி தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத் சர்தார் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பரத் ஷர்மா, முதல் ஓவரிலேயே சாய் கிஷோரின் சுழலில் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான ஆதித்யா கார்வால் 29 ரன்களுக்கு பாபா அபரஜித்தின் பந்தில் ஆட்டமிழந்தார்.

3ம் வரிசையில் இறங்கிய கேப்டன் அசோக் மெனேரியாவும் அர்ஜித் குப்தாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தனர். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ராஜஸ்தான் கேப்டன் அசோக் மெனேரியா 32 பந்தில் 51 ரன்கள் அடித்து, சாய் கிஷோரின் பந்தில் ஆட்டமிழக்க, நட்சத்திர வீரர் மஹிபால் லோம்ரார் 3 ரன்னிலும், அர்ஜித் குப்தா 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அர்ஜித் குப்தா ஐந்தாவது விக்கெட்டாக ஆட்டமிழக்கும்போது, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 17.4 ஓவரில் 142 ரன்களாக இருந்தது. அதன்பின்னர் டெத் ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் கடைசி 14 பந்தில் வெறும் 12 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தது. அர்ஜித் குப்தா 18வது ஓவரின் 4வது பந்தில் ஆட்டமிழந்த பின்னர் ராஜேஷ் பிஷ்னோய் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சந்திரபால் சிங்(2), ரவி பிஷ்னோய்(0), அனிகேத் சௌத்ரி(0) ஆகிய மூவரையும் வீழ்த்தினார் எம்.முகமது. இதையடுத்து 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது ராஜஸ்தான் அணி.

ஐந்தாவது ஓவரில் ஜோடி சேர்ந்த அசோக் மெனேரியா மற்றும் அர்ஜித் குப்தா பார்ட்னர்ஷிப்பை 14வது ஓவரின் முதல் பந்தில் தமிழ்நாடு அணி உடைக்கும்போது, அந்த அணியின் ஸ்கோர் 120. அதன்பின்னர் கடைசி 7 ஓவர்களில் அந்த அணி வெறும் 34 ரன்கள் மட்டுமே அடித்தது.

தமிழ்நாடு அணி சார்பில் எம்.முகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், சோனு யாதவ், முருகன் அஷ்வின் மற்றும் பாபா அபரஜித் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு முன்னேற, 155 ரன்கள் என்ற இலக்கை அடித்தாக வேண்டும். அரையிறுதி போன்ற நாக் அவுட் போட்டிகளில் இந்த இலக்கு சவாலானது தான்.
 

click me!