அருண் கார்த்திக்கின் காட்டடியால் ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறிய தமிழ்நாடு..!

By karthikeyan VFirst Published Jan 29, 2021, 3:41 PM IST
Highlights

அருண் கார்த்திக்கின் அதிரடியான பேட்டிங்கால் சையத் முஷ்டாக் அலி தொடரின் அரையிறுதியில் ராஜஸ்தானை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
 

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி, அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் அசோக் மெனேரியா அரைசதம் அடித்தார். அசோக் மெனேரியாவின் அரைசதம்(51) மற்றும் அர்ஜித் குப்தாவின் பொறுப்பான பேட்டிங்கால்(45) ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. 14வது ஓவரின் முதல் பந்தில் அசோக் மெனேரியா 3வது விக்கெட்டாக அவுட்டாகும்போது, ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 120. அதன்பின்னர் எஞ்சிய 7 ஓவர்களில் வெறும் 34 ரன்கள் மட்டுமே அடித்தது அந்த அணி.

கடைசி சில ஓவர்களை தமிழக பவுலர்கள் சிறப்பாக வீசினர். கடைசி ஓவரில் மட்டும் எம்.முகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் டெத் ஓவர்களில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் கட்டுக்குள் வந்தது. தமிழ்நாடு அணி சார்பில் எம்.முகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், முருகன் அஷ்வின், பாபா அபரஜித், சோனு யாதவ் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 155 என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 4 ரன்னிலும், பாபா அபரஜித் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஜெகதீசன் 28 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 9.4 ஓவரில் 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது தமிழ்நாடு அணி.

அதன்பின்னர் அருண் கார்த்திக்கும் தினேஷ் கார்த்திக்கும் ஜோடி சேர்ந்தனர். ஒருமுனையில் தினேஷ் கார்த்திக் நிதானம் காட்ட, மறுமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார் அருண் கார்த்திக். அருண் கார்த்திக்கின் அதிரடியால் 19வது ஓவரிலேயே தமிழ்நாடு அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதிரடியாக ஆடிய அருண் கார்த்திக், 54 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்தார். கடைசி வரை களத்தில் நின்று தமிழ்நாடு அணியை வெற்றியும் பெற செய்தார். இதையடுத்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது தமிழ்நாடு அணி. பஞ்சாப் மற்றும் பரோடா அணிகளுக்கு இடையேயான 2வது அரையிறுதி போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
 

click me!