
டி20 உலக கோப்பை தகுதிச்சுற்றின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்திடம் தோற்ற வங்கதேச அணி, ஓமன் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் வங்கதேச அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சர்க்காருக்கு பதிலாக முகமது நைம் சேர்க்கப்பட்டு, நைமும் லிட்டன் தாஸும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தாஸ் 6 ரன்னிலும், 3ம் வரிசையில் இறங்கிய மஹிடி ஹசன் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணிக்கு, தொடக்க வீரர் நைமும் ஷகிப் அல் ஹசனும் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து கொடுத்தனர்.
இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 80 ரன்களை சேர்த்தனர். அருமையாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 29 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் நூருல் ஹசன்(3), அஃபிஃப் ஹுசைன்(1) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளிக்க, மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் நைம் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர்களான மஹ்மதுல்லா மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் பின்வரிசையில் இறங்கினர். அதனால் அவர்களாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதையடுத்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் கடைசி விக்கெட்டை இழந்து, 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.
154 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஓமன் அணிக்கு நிர்ணயித்துள்ளது.