பாகிஸ்தான் அணிக்கு எதிரான 31ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 31ஆவது லீக் போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி வங்கதேச அணியில் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஷித் ஹசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஷாகீன் அஃப்ரிடி வீசிய முதல் ஓவரிலேயே தன்ஷித் ஹசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 4 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிதானமாக விளையாடிய லிட்டன் தாஸ் 6 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சேர்த்தார். இவரைத் தொடர்ந்து மஹமுத்துல்லா நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அவர், 70 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 56 ரன்கள் குவித்தார்.
கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன் பங்கிற்கு 43 ரன்கள் சேர்த்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மெஹிடி ஹசன் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக வங்கதேச அணியானது 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷாகீன் அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் ஜூனியர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஹரிஷ் ராஃப் 2 விக்கெட்டும், இப்திகார் அகமது மற்றும் உசாமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் பாகிஸ்தான் – டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
பாகிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர்கள்:
55 – வாசீம் அக்ரம்
35 – வகாப் ரியாஸ்
34 – இம்ரான் கான்
32 – ஷாகீன் அஃப்ரிடி
30 – ஷாகீத் அஃப்ரிடி
30 – சோயிப் அக்தர்