
இங்கிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஜெயித்து இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணி:
தமிம் இக்பால் (கேப்டன்), லிட்டன் தாஸ், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, முஷ்ஃபிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், மஹ்மதுல்லா, அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன் மிராஸ், டைஜுல் இஸ்லாம், எபாடட் ஹுசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
இங்கிலாந்து அணி:
ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், டேவிட் மலான், ஜேம்ஸ் வின்ஸ், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ரெஹான் அகமது, அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால்(11) மற்றும் லிட்டன் தாஸ்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். அதன்பின்னர் சிறப்பாக ஆடிய ஷாண்டோ அரைசதம் அடித்து 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வங்கதேச அணியின் சீனியர் வீரர்களான முஷ்ஃபிகுர் ரஹிம் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவரும் பொறுப்புடன் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். முஷ்ஃபிகுர் ரஹிம் 70 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 75 ரன்களும் குவிக்க, மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை. ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹிம் ஆகிய இருவரது பொறுப்பான பேட்டிங்கால் 246 ரன்கள் அடித்தது வங்கதேச அணி.
247 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நடப்பு ஒருநாள் சாம்பியன் இங்கிலாந்து அணியில் பெரிய வீரர்கள் இருந்தும் கூட, யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஜேசன் ராய் (19), ஃபிலிப் சால்ட்(35), டேவிட் மலான்(0), ஜேம்ஸ் வின்ஸ்(38), சாம் கரன்(23), ஜோஸ் பட்லர்(26), கிறிஸ் வோக்ஸ்(34) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால் அந்த அணி 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி, இந்த தொடரை இழந்துவிட்டதால் இது ஆறுதல் வெற்றி மட்டுமே. பேட்டிங்கில் 75 ரன்கள் அடித்து அசத்திய ஷகிப் அல் ஹசன், 4 விக்கெட் வீழ்த்தி பவுலிங்கிலும் அசத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.