நீங்க எவ்வளவு கம்மியா இலக்கு செட் பண்ணாலும், நாங்க அடிக்கமாட்டோம்..! வங்கதேசத்திடம் அடம்பிடித்து தோற்ற ஆஸி.,

By karthikeyan VFirst Published Aug 7, 2021, 3:36 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று 3-0 என டி20 தொடரை வென்றுவிட்டது வங்கதேச அணி.
 

ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணி படுமட்டமாக ஆடிவருகிறது. முதல் 2 டி20 போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, 3வது டி20 போட்டியிலாந்து வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.

ஆனால் 3வது போட்டியிலும் படுமோசமான பேட்டிங்கால் தோல்வியடைந்தது ஆஸ்திரேலிய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் கேப்டன் மஹ்மதுல்லா சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். அவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அனைவருமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். மஹ்மதுல்லாவின் அரைசதத்தால்(52 ரன்கள்) 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது.

128 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மேத்யூ வேட் வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பென் மெக்டர்மோட் சிறப்பாக ஆடி 35 ரன்கள் அடித்தார்.  ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் வழக்கம்போலவே சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் 51 ரன்கள் அடித்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோர் செய்தாலும், ரன் வேகம் மிக மெதுவாக இருந்தது. 

இலக்கு எளிதானது என்பதால் கடைசி வரை போட்டியை எடுத்துச்சென்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மெதுவாக ஆடினர். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் எண்ணம் ஈடேறவில்லை. கடைசி 2 ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வெறும் 23 ரன்கள் மட்டுமே தேவை. அலெக்ஸ் கேரி மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகிய 2 நல்ல வீரர்கள் களத்தில் இருந்தும், கடைசி 2 ஓவர்களில் அவர்களால் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. 20 ஓவரில் 117 ரன்கள் மட்டுமே அடித்து 10 ரன் வித்தியாசத்தில் தோற்றது ஆஸ்திரேலிய அணி.

வங்கதேச அணியின் இந்த வெற்றிக்கு முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய அருமையான 19வது ஓவர் தான் காரணம். 19வது ஓவரை வீசிய முஸ்தாஃபிசுர் ரஹ்மான், அந்த ஓவரில் வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதையடுத்து 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 3-0 என டி20 தொடரை வென்றது. 

இந்த தொடரில் எவ்வளவு எளிதான இலக்கை வங்கதேச அணி நிர்ணயித்தாலும், அதை ஆஸ்திரேலிய அணியால் அடிக்கமுடியாமல் தோல்விகளை தழுவிவருகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த 3 போட்டிகளிலும் தோற்றதற்கு காரணம், அந்த அணியின் படுமோசமான பேட்டிங் தான்.
 

click me!