ராகுல் அரைசதம், கோலி கோல்டன் டக்.. ஆண்டர்சனிடம் மீண்டும் சரணடைந்தார்..! மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்

By karthikeyan VFirst Published Aug 5, 2021, 8:41 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டுக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிந்தது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை பும்ராவும் ஷமியும் சேர்ந்து சரித்தனர். பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 64 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ராகுலும் தொடர்ந்தனர். ரோஹித்தும் ராகுலும் இணைந்து இன்றைய ஆட்டத்தில் அபாரமாக ஆடினர்.

களத்தில் நன்றாக செட்டில் ஆனதால், அனுபவ ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியான ஆண்டர்சன் - பிராட் ஜோடி எவ்வளவோ முயன்றும் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அவர்களது பவுலிங்கை எல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டு ஆடி பவுண்டரிகளை விளாசினர் ரோஹித்தும் ராகுலும்.

முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 97 ரன்களை குவித்த நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ராபின்சனின் பந்தில் புல் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து 36 ரன்னில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. 

அதன்பின்னர் 2வது செசனை கேஎல் ராகுலும் புஜாராவும் தொடர்ந்தனர். அருமையான லைன் & லெந்த்தில் வீசிய ஆண்டர்சன், புஜாராவை 4 ரன்னிலும், அதற்கடுத்த பந்திலேயே கோலியை கோல்டன் டக்கிலும் வெளியேற்றினார். ரஹானேவும் 5 ரன்னில் ரன் அவுட்டாக, 97 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 114 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். கேஎல் ராகுலும் ரிஷப் பண்ட்டும் களத்தில் இருந்த நிலையில், வெளிச்சமின்மையால் ஆட்டம் தடைபட்டது. 46.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 125 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டம் தடைபட்டது.

ஆண்டர்சனின் பவுலிங்கில் கோலி அதிகமான முறை ஆட்டமிழந்திருப்பதால், இந்த தொடரில் ஆண்டர்சனை கோலி எப்படி எதிர்கொள்கிறார் என்று எதிர்பார்க்கப்பு நிலவிய நிலையில், ஒரே பந்தில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார் கோலி.
 

click me!