#ENGvsIND முக்கித்தக்கி முதல் விக்கெட்டை வீழ்த்திய இங்கிலாந்து..! கஷ்டமான சம்பவத்தை செய்த ராபின்சன்

By karthikeyan VFirst Published Aug 5, 2021, 6:00 PM IST
Highlights

இங்கிலாந்து அணி மிகக்கடுமையாக போராடி இந்திய அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 183 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.

இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை பும்ராவும் ஷமியும் சேர்ந்து சரித்தனர். பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 64 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்திருந்தது. 2ம் நாளான இன்றைய ஆட்டத்தை ரோஹித்தும் ராகுலும் தொடர்ந்தனர். ரோஹித்தும் ராகுலும் இணைந்து இன்றைய ஆட்டத்தில் அபாரமாக ஆடினர்.

இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிகரமான பவுலிங் ஜோடியுமான ஆண்டர்சன் - பிராட் ஜோடியால் கூட இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. களத்தில் நன்றாக செட்டில் ஆனதால், ஆண்டர்சன், பிராடின் பவுலிங்கை எல்லாம் அசால்ட்டாக எதிர்கொண்டு ஆடி பவுண்டரிகளை விளாசினர் ரோஹித்தும் ராகுலும்.

முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறினர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து 97 ரன்களை குவித்த நிலையில், 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ராபின்சனின் பந்தில் புல் ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து 36 ரன்னில் ஆட்டமிழந்தார் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா செட்டில் ஆனபின்னர் அவரை வீழ்த்துவது கடினம். மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிக்கொண்டிருந்த ரோஹித், ராபின்சன் பவுலிங்கில் தனக்கு மிகவும் பிடித்த புல் ஷாட்டை ஆடி ஆட்டமிழந்தார். பவுன்ஸர் வீசினால் ரோஹித் கண்டிப்பாக புல் ஷாட் ஆடுவார் என்று அறிந்த ராபின்சன், டீப் ஸ்கொயர் லெக்கில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு பவுன்ஸரை வீசினார். அதேபோலவே ரோஹித் புல் ஷாட் ஆடி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் 48 ரன்களுடன் களத்தில் இருந்த நிலையில், அத்துடன் மதிய உணவு இடைவேளை விடப்பட்டது.

click me!