அவங்க சொல்றதுக்குலாம் மண்டைய ஆட்டணுங்குற அவசியமும் இல்ல.. கேட்குற ஆளை எல்லாம் எடுத்து கொடுக்க தேவையும் இல்ல

By karthikeyan VFirst Published Jul 23, 2019, 5:26 PM IST
Highlights

ராயுடுவை நான்காம் வரிசை வீரராக உறுதி செய்துவிட்டு பின்னர் கடைசி நேரத்தில் விஜய் சங்கரை அணியில் எடுத்தது தேர்வுக்குழு. அதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் செயல்படக்கூடியவர் என்ற வகையில் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டதாக அவரது தேர்வு நியாயப்படுத்தப்பட்டது. 
 

உலக கோப்பையில் தோற்ற பிறகு, இந்திய அணியின் தேர்வு குறித்த விமர்சனங்கள் வலுத்தன. உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் ராயுடுவின் பெயர் இருந்தும் கூட, 2 வீரர்கள் மாற்றப்பட்டபோதும் ராயுடு அழைக்கப்படவில்லை. 

ராயுடுவை நான்காம் வரிசை வீரராக உறுதி செய்துவிட்டு பின்னர் கடைசி நேரத்தில் விஜய் சங்கரை அணியில் எடுத்தது தேர்வுக்குழு. அதுவே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் விஜய் சங்கர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் செயல்படக்கூடியவர் என்ற வகையில் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டதாக அவரது தேர்வு நியாயப்படுத்தப்பட்டது. 

அதன்பின்னர் உலக கோப்பையின் இடையே தொடக்க வீரர் தவான் காயத்தால் வெளியேறியதை அடுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்பட்டார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான விஜய் சங்கர் காயத்தால் வெளியேறியதை அடுத்து தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அணியில் எடுக்கப்பட்டார். 2 முறை ராயுடுவை எடுப்பதற்கான வாய்ப்பு இருந்தும் கூட ராயுடு எடுக்கப்படவில்லை. 

இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், அணி நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையிலேயே ரிஷப் பண்ட்டும் மயன்க் அகர்வாலும் அணியில் எடுக்கப்பட்டார்களே தவிர வேறு எந்தவித உள்நோக்கமோ பாரபட்சமான செயல்பாடோ இல்லை என்று விளக்கமளித்தார். 

எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் கேப்டன் அசாருதீன் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அசாருதீன், உலக கோப்பை அணியில் ஏதேனும் ஒரு வீரர் காயத்தால் வெளியேற நேரிட்டால், மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கும் ஒரு வீரரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். அணி தேர்வாளராக இருப்பவர், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கேட்பதற்கெல்லாம் தலையாட்ட கூடாது. அவர்கள் எந்த வீரரை வேண்டுமானாலும் கேட்பார்கள். ஆனால் இவர் தான் வீரர்; இவரைத்தான் அனுப்புவோம். இவரை வைத்துத்தான் நீங்கள் ஆடவேண்டும் என்று திட்டவட்டமாக தேர்வாளர்கள் தெரிவித்திருக்க வேண்டும். அதைவிடுத்து கேப்டனும் பயிற்சியாளரும் கேட்பதற்கு எல்லாம் உடன்படக்கூடாது. 

நான் கேப்டனாக இருந்தபோது கூட, நிறைய வீரர்களை கேட்டிருக்கிறேன். ஆனால் தேர்வாளர்கள் அவர்களை கொடுக்க மறுத்து, நாங்கள் கொடுக்கும் வீரர்களை வைத்துத்தான் ஆட வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக தெரிவித்திருக்கின்றனர். எனவே தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று அசாருதீன் சாடியுள்ளார்.
 

click me!