IND vs NZ அக்ஸர் படேல் 5 விக்கெட்.. நியூசிலாந்தை முதல் இன்னிங்ஸில் 300க்குள் சுருட்டிய இந்தியா..!

By karthikeyan VFirst Published Nov 27, 2021, 4:27 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியை 296 ரன்களுக்கு சுருட்டியது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி தொடங்கி கான்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அபாரமாக பேட்டிங் ஆடி அறிமுக டெஸ்ட்டிலேயே சதமடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 105 ரன்கள் அடித்தார். ஷுப்மன் கில் (52) மற்றும் ஜடேஜா (50) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். பின்வரிசையில் அஷ்வின் 38 ரன்கள் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் வில் யங் மற்றும் டாம் லேதம் ஆகிய இருவரும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 2ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் அடித்திருந்தது. வில் யங் 75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை யங்கும் டாம் லேதமும் தொடர்ந்தனர். முதல் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்த நிலையில், வில் யங்கை 89 ரன்களில் வீழ்த்தி அஷ்வின் பிரேக் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனை 18 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, சீனியர் வீரரான ரோஸ் டெய்லரை 11 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தினார்.

டெய்லரை வீழ்த்திய அக்ஸர் படேல், ஹென்ரி நிகோல்ஸை வெறும் 2 ரன்னில் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி சதத்தை நெருங்கிய டாம் லேதமை 95 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்தி அசத்தினார். அக்ஸர் படேலின் பவுலிங்கில் டாம் லேதம் இறங்கிவர, அதைக்கண்ட அக்ஸர் பந்தை ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே நன்றாக விலக்கி வீசினார். அது டாம் லேதமின் பேட்டில் அடித்து பின்னால் செல்ல, அதைப்பிடித்து ஸ்டம்பிங் செய்தார் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத். 

இதையடுத்து ராச்சின் ரவீந்திராவை 13 ரன்னில் ஜடேஜா போல்டாக்கி அனுப்ப,  டாம் பிளண்டெல் (13) மற்றும் சௌதி (5) ஆகிய இருவரையும் அக்ஸர் படேல் அவுட்டாக்கினார். கடைசி 2 விக்கெட்டுகளை அஷ்வின் வீழ்த்த, 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூசிலாந்து அணி.

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 2வது ஓவரிலேயே வெறும் ஒரு ரன்னுக்கு ஜாமிசன் பந்தில் போல்டாகி வெளியேறினார். அதைத்தொடர்ந்து மயன்க் அகர்வாலுடன், புஜாரா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

click me!