ஆஸ்திரேலிய அணியின் ஆட்டத்தை அடக்கி சுருட்டிய இந்திய பவுலர்கள்!! இந்திய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 2, 2019, 5:05 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 237 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது ஆஸ்திரேலிய அணி. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஃபின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஃபின்ச்சை டக் அவுட்டாக்கினார் பும்ரா. ரன் கணக்கை தொடங்கும் முன்பே முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணியை அதன்பிறகு, மார்கஸ் ஸ்டோய்னிஸும் உஸ்மான் கவாஜாவும் இணைந்து மீட்டெடுத்தனர். 

இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பின்னர் ஓரளவிற்கு அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ரன்களை சேர்த்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸை 37 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் கேதர் ஜாதவ். இதையடுத்து அரைசதம் அடித்த உஸ்மான் கவாஜாவை குல்தீப் யாதவ் 50 ரன்களில் வீழ்த்தினார். 

அதன்பிறகு மேக்ஸ்வெல்லும் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மேக்ஸ்வெல் வழக்கம்போலவே சில பெரிய ஷாட்டுகளை அதிரடியாக ஆடி மிரட்டினார். இவர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அதற்கு குல்தீப் யாதவ் அனுமதிக்கவில்லை. ஹேண்ட்ஸ்கம்பை 19 ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து ஆஷ்டன் டர்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரையும் கிளீன் போல்டாக்கி அனுப்பினார் ஷமி. மேக்ஸ்வெல் 40 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு ஆஸ்திரேலிய அணியின் ரன்ரேட் குறைய தொடங்கியது. 

மேக்ஸ்வெல் 40வது ஓவரில் ஆட்டமிழக்க, அதன்பிறகு கடைசி 10 ஓவர்களை இந்திய பவுலர்கள் கட்டுக்கோப்பாக வீசி ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்தினர். கடைசி 10 ஓவர்களில் அந்த அணி 63 ரன்கள் மட்டுமே எடுத்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலிய அணி. 
 

click me!