IND vs AUS: அக்ஸர் படேல், பும்ரா அபார பவுலிங்..! ஹர்ஷல் படேல் பவுலிங்கில் சிக்ஸர் மழை பொழிந்த மேத்யூ வேட்

By karthikeyan VFirst Published Sep 23, 2022, 10:17 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டி 8 ஓவர்களாக குறைத்து நடத்தப்படும் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 ஓவரில் 90 ரன்களை குவித்து 91 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடந்துவருகிறது. 

மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டி மழையால் இரண்டரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதனால்  8 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் நீக்கப்பட்டு, பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், சீன் அபாட், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அடித்து ஆட, கேமரூன் க்ரீன் 5 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். க்ளென் மேக்ஸ்வெல் (0) மற்றும் டிம் டேவிட் (2) ஆகிய இருவரையும் க்ளீன் போல்டாக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். 

அடித்து ஆடி 15 பந்தில் 31 ரன்களை விளாசிய கேப்டன் ஃபின்ச்சை பும்ரா க்ளீன் போல்டாக்கி அனுப்பினார். அக்ஸர் படேல், பும்ரா ஆகிய இருவரும் அபாரமாக பந்துவீச, 7 ஓவரில் 71 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஆஸ்திரேலிய அணி. ஹர்ஷல் படேல் வீசிய 8வது ஓவரில் மேத்யூ வேட் 3 சிக்ஸர்களை விளாச, 8 ஓவரில் 90 ரன்களை குவித்து 91 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணைத்தது ஆஸ்திரேலிய அணி. அதிரடியாக ஆடிய மேத்யூ வேட் 20 பந்தில் 43 ரன்களை விளாசினார்.
 

click me!