ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை உறுதியாக இழந்துவிட்ட ஆஸ்திரேலியா..!

By karthikeyan VFirst Published Feb 2, 2021, 8:05 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை ஆஸி., அணி உறுதியாக இழந்துவிட்டது.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் முறையாக நடத்தப்பட்டுவருகிறது. 2019ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு நடந்த இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் முதல் நடந்த டெஸ்ட் போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சேரும்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணைப்படுத்தப்பட்ட காலத்தில் ஃபைனலுக்கு முன்பாக, புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகள், அணிகள் பெறும் வெற்றி விகிதங்களின் அடிப்படையில் பட்டியலிடப்படுகிறது.

அந்தவகையில், இப்போதுவரை ஆடியதில் 71.7% வெற்றி விகிதத்துடன் இந்திய அணி முதலிடத்தில் 70% வெற்றி விகிதத்துடன் நியூசிலாந்து அணியும் 2ம் இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் தோற்ற ஆஸி., அணி புள்ளி பட்டியலில் 69.2% என்ற வெற்றி விகிதத்துடன் 3ம் இடத்தில் உள்ளது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் ஜூன் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆஸி.,க்கு இருந்த கடைசி டெஸ்ட் தொடர் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தான். இப்போது புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள ஆஸி., அணி ஃபைனலுக்கு முன்னேற வேண்டுமானால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் குறைந்தது 2 வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தான் ஆஸி., அணிக்கு ஃபைனலுக்கு முன்னேற இருந்த கடைசி வாய்ப்பு. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது.

அதனால், புள்ளி பட்டியலில் ஆஸி., அணியால் இனி முன்னேற முடியாது. ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், ஆஸி.,யை விட அதிக புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களில் இருப்பதால், ஆஸி., அணி ஃபைனல் வாய்ப்பை உறுதியாக இழந்துவிட்டது.
 

click me!