ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 3ஆவது ஓவரில் மட்டும் ரோகித் சர்மா 4 சிக்ஸர்கள் உள்பட 29 ரன்கள் குவித்துள்ளார்.
செயிண்ட் லூசியாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இணைந்தனர். முதல் 2 ஓவருக்கு இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் 3ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்து முதல் கடைசி பந்து வரை ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அந்த ஓவரில் மட்டும் ரோகித் சர்மா 6, 6, 4, 6, 0, வைடு, 6 என்று மொத்தமாக 29 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 22 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து 5ஆவது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா முட்டி போட்டு சிக்ஸர் அடித்தார். அவர் அடித்த இந்த சிக்ஸர் மைதானத்தின் மேற்கூரை மீது விழுந்தது. அதோடு 100 மீட்டர் சிக்ஸரும் விளாசியுள்ளார். இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் 5 சிக்ஸர் அடித்ததன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
மேலும், இந்தப் போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் குறைவான பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 22 பந்துகளில் ஆரோன் ஜோன்ஸ் (அமெரிக்கா - கனடா) அரைசதம் அடித்துள்ளார். அதே போன்று 22 பந்துகளில் குயீண்டன் டி காக் இங்கிலாந்துக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 26 பந்துகளில் அமெரிக்கா அணிக்கு எதிராக அரைசதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.