#WIvsAUS டி20யில் வாங்கிய அடிக்கு ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்த ஆஸி.,! வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது

By karthikeyan VFirst Published Jul 27, 2021, 3:11 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, 2-1 என ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி.
 

ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. டி20 தொடரை 1-4 என வெஸ்ட் இண்டீஸிடம் இழந்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்றது. இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கக்கூடிய கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.

கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் எவின் லூயிஸ் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.  ஒருமுனையில் லூயிஸ் நிலைத்து ஆட, மறுமுனையில் ஷாய் ஹோப்(14), ஹெட்மயர்(6), டேரன் பிராவோ(18), நிகோலஸ் பூரன்(3), பொல்லார்டு(11), ஜேசன் ஹோல்டர்(5), அல்ஸாரி ஜோசப்(15) மற்றும் மற்ற 3 டெயிலெண்டர்கள் என அனைவருமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 45.1 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து 153 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஜோஷ் ஃபிலிப்(10) மற்றும் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ்(1) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். அலெக்ஸ் கேரி(35) மற்றும் மிட்செல் மார்ஷ்(19) ஆகிய இருவரும் ஓரளவிற்கு நன்றாக ஆட, அதன்பின்னர் மேத்யூ வேட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து(51) ஆஸ்திரேலிய அணியை 31வது ஓவரிலேயே வெற்றி பெற செய்தார்.

இந்த வெற்றியையடுத்து, 2-1 என  வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றது. டி20 தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை வென்று பழிதீர்த்தது.
 

click me!