கிரேட் பிளேயர்ங்க; அவரு ஆடுறதை நாங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து என்ஜாய் பண்ணி பார்ப்போம் - ஷிகர் தவான்

By karthikeyan VFirst Published Jul 26, 2021, 9:43 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ் பேட்டிங் ஆடுவதை இந்திய வீரர்கள் அனைவரும் என்ஜாய் செய்து பார்ப்பதாக ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
 

உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி தேர்வாளர்களால் தன்னை புறக்கணிக்கமுடியாத சூழலை உருவாக்கினார் சூர்யகுமார் யாதவ்.

அதன்விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் அபாரமாக ஆடினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய சூர்யகுமார் யாதவ், முதல் ஒருநாள் போட்டியில் 32* ரன்கள், 2வது போட்டியில் 53 ரன்கள் மற்றும் 3வது போட்டியில் 40 ரன்கள் என 3 போட்டிகளிலும் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நடந்த முதல் டி20 போட்டியிலும் மந்தமான பிட்ச்சில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக ஆடி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.

ஃப்ளிக் ஷாட்டுகளை அபாரமாக ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவ், அனைத்து விதமான ஷாட்டுகளையும் நன்றாக ஆடக்கூடிய தெளிவான வீரர். பல விதமான ஷாட்டுகளை தன்னகத்தே கொண்ட சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 என்றும் அழைக்கப்படுகிறார்.

தொடர்ச்சியான தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ள சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர். 

சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய இலங்கை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ் கிரேட் பிளேயர். அவரது பேட்டிங்கை நாங்கள் என்ஜாய் செய்து பார்ப்போம். என்னுடன் ஆடும்போது, என் மீதான அழுத்தத்தை தவிடுபொடியாக்கிவிட்டார். அவர் ஷாட்டுகளை மதிப்பிட்டு ஆடும் முறையும் டைமிங்கும் பார்க்க அருமையாக இருக்கிறது என்றார் தவான். 
 

click me!