முதல் பந்தையே, ஏற்கனவே 100 பந்து பேட்டிங் ஆடுன மாதிரி ஆடுறாப்ள..! இந்திய வீரருக்கு முகமது கைஃப் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 26, 2021, 6:54 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸின் முதல் பந்தையே, ஏற்கனவே 100 பந்துகள் ஆடி களத்தில் செட்டில் ஆகிவிட்ட பேட்ஸ்மேனை போல ஆடுவதாக முகமது கைஃப்  புகழாரம் சூட்டியுள்ளார்.
 

உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி தேர்வாளர்களால் தன்னை புறக்கணிக்கமுடியாத சூழலை உருவாக்கினார் சூர்யகுமார் யாதவ்.

அதன்விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் முதல் முறையாக எடுக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், அந்த தொடரில் அபாரமாக ஆடினார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடிய சூர்யகுமார் யாதவ், முதல் ஒருநாள் போட்டியில் 32* ரன்கள், 2வது போட்டியில் 53 ரன்கள் மற்றும் 3வது போட்டியில் 40 ரன்கள் என 3 போட்டிகளிலும் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து நடந்த முதல் டி20 போட்டியிலும் மந்தமான பிட்ச்சில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ். ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக ஆடி இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார் சூர்யகுமார் யாதவ்.

ஃப்ளிக் ஷாட்டுகளை அபாரமாக ஆடக்கூடிய சூர்யகுமார் யாதவ், அனைத்து விதமான ஷாட்டுகளையும் நன்றாக ஆடக்கூடிய தெளிவான வீரர். பல விதமான ஷாட்டுகளை தன்னகத்தே கொண்ட சூர்யகுமார் யாதவ், மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடியவர். அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 என்றும் அழைக்கப்படுகிறார்.

தொடர்ச்சியான தனது சிறப்பான பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்துள்ள சூர்யகுமார் யாதவை முன்னாள் வீரர்கள் பலரும் புகழ்ந்துவருகின்றனர். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய ஜாம்பவான்களுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சூர்யகுமார் யாதவ் என்று ஆஷிஸ் நெஹ்ரா புகழாரம் சூட்டியிருந்த நிலையில், முகமது கைஃபும் புகழாரம் சூட்டியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் குறித்து பேசியுள்ள முகமது கைஃப், சூர்யகுமார் யாதவ் முதல் பந்தையே, ஏற்கனவே 100 பந்துகளை ஆடி செட்டில் ஆகிவிட்டதை போல ஆடுகிறார். அவருக்கு பதற்றமோ, எந்தவித சந்தேகமோ இல்லாமல், மிகத்தெளிவாகவும் கண்ட்ரோலுடனும் ஆடுகிறார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி தேசிய அணியில் இடம்பெற்ற வீரர் சர்வதேச அளவில் அபாரமாக ஆடுவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முகமது கைஃப் புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!