AUS vs WI: முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.! 1-0 என தொடரில் முன்னிலை

By karthikeyan VFirst Published Dec 4, 2022, 2:44 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
 

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), டேக்நரைன் சந்தர்பால், பானர், ஜெர்மைன் பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா ட சில்வா (விக்கெட் கீப்பர்), அல்ஸாரி ஜோசஃப், கீமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் (200) மற்றும் மார்னஸ் லபுஷேன் (204) ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டைசதமடித்தனர். டிராவிஸ் ஹெட் 99 ரன்களை குவித்து ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிரைக் பிராத்வெயிட் (64) மற்றும் சந்தர்பால் (51) ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

315 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், முதல் இன்னிங்ஸில் இரட்டைசதமடித்த லபுஷேன், 2வது இன்னிங்ஸில் சதமடித்தார். லபுஷேன் 104 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களுக்கு இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 497 ரன்கள் முன்னிலை பெற, 498 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4ம் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் அடித்த்திருந்தது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சந்தர்பால் 45 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ப்ரூக்ஸ் (11) மற்றும் பிளாக்வுட் (24) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி சதமடித்த தொடக்க வீரர் கிரைக் பிராத்வெயிட் 4ம் நாள் ஆட்ட முடிவில்  101 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

கடைசி நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 306 ரன்களும், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 7  விக்கெட்டுகளும் தேவைப்பட்டது. கடைசி நாள் ஆட்டத்தில் கிரைக் பிராத்வெயிட் 110 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்வரிசையில் ரோஸ்டான் சேஸ் (55) மற்றும் அல்ஸாரி ஜோசஃப் (43) ஆகிய இருவரைத்தவிர மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 2வது இன்னிங்ஸில் 333 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்.

164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!