SL vs AUS: ஈசியான இலக்கையே கஷ்டப்பட்டு அடித்த ஆஸ்திரேலியா..! தோல்வி பயத்தை காட்டிய இலங்கை

By karthikeyan VFirst Published Jun 24, 2022, 9:33 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 161 ரன்களையே கிட்டத்தட்ட கஷ்டப்பட்டுத்தான் அடித்து வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.
 

இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3-1 என இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. கொழும்பில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இலங்கை அணி:

தனுஷ்கா குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சாரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால், தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லாலகே, சாமிகா கருணரத்னே, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்‌ஷனா. 

ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ், மேத்யூ குனெமேன், ஜோஷ் ஹேசில்வுட்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 24.2 ஓவரில் 85 ரன்களுக்கே இலங்கை அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

சாமிகா கருணரத்னே பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி ஸ்கோர் செய்ய, 9வது விக்கெட்டுக்கு அவருடன் ஜோடி சேர்ந்த ப்ரமோத் மதுஷன் ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் பேட்டிங் ஆடினார். மதுஷன் 52 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் அடிக்க, இதற்கிடையே அடித்து ஆடிய சாமிகா கருணரத்னே அரைசதம் அடித்தார். தனி ஒருவனாக பொறுப்புடன் பேட்டிங் ஆடிய சாமிகா கருணரத்னே 75 ரன்களை குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, 43.1 ஓவரில் 160 ரன்கள் அடித்தது.

161 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். வார்னர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஸ் 5 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 24 ரன்னிலும் ஆட்டமிழக்க, 50 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலிய அணி.

5வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியும் மார்னஸ் லபுஷேனும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தினர். இலக்கு எளிதானது என்பதால் 50-60 பார்ட்னர்ஷிப் அமைத்தாலே வெற்றி பெற்றுவிடலாம் என்பதை உணர்ந்து, கேரியும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினர். 5வது விக்கெட்டுக்கு 71 ரன்களை சேர்த்தனர். லபுஷேன் 31 ரன்னில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அலெக்ஸ் கேரி நிலைத்து நின்று 45 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.

164 ரன்கள் என்ற எளிய இலக்கையே 40வது ஓவரில் தான் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. சிறிய இலக்கை வைத்துக்கொண்டு இலங்கை அணி நன்றாக போராடியது. ஆஸி.,அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த கட்டத்தில் அந்த அணிக்கு தோல்வி பயத்தை காட்டியது. அலெக்ஸ் கேரி - லபுஷேன் பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலிய அணியின் மானம் தப்பியது. இல்லையெனில் இந்த எளிய இலக்கையே அடிக்க முடியாமல் தோற்றிருக்கும்.

இந்த போட்டியில் தோற்றாலும், ஏற்கனவே இந்த தொடரில் முந்தைய 3 போட்டிகளில் ஜெயித்ததால் 3-2 என ஒருநாள் தொடரை வென்றது இலங்கை அணி.
 

click me!