
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் தான் அடித்தார். ஆலி போப்ட் 35 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 21 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (5) ஆகிய சீனியர் நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 147 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அருமையாக ஆடி 94 ரன்கள் அடித்தார். 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அவர் தவறவிட்டதை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தவறவிடவில்லை. மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய டிராவிஸ் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய டிராவிஸ் ஹெட், 152 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக ஆடி 35 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 425 ரன்களை குவித்தது.
258 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 13 ரன்னிலும், ஹசீப் ஹமீத் 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, 61 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் டேவிட் மலானும் ஜோ ரூட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இருவரும் களத்தில் நிற்க 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்திருந்தது. டேவிட் மலான் 80 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
4ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 82 ரன்களுக்கு டேவிட் மலானை வீழ்த்தினார் ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன். அவரைத்தொடர்ந்து ரூட்டும் 89 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஸ்டோக்ஸ் (14), பட்லர் (23), ஆலி போப் (4), கிறிஸ் வோக்ஸ் (16) ஆகிய அனைவருமே ஏமாற்றமளிக்க, 2வது இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.
மொத்தமாக இங்கிலாந்து அணி வெறும் 19 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற, 20 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக, 152 ரன்களை குவித்து இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக இருந்த டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார்.