Ben Stokes: அலட்சியமான அம்பயரிங்.. பென் ஸ்டோக்ஸ் வீசிய 14 நோ பால்கள்..! கண்டுகொள்ளாத தேர்டு அம்பயர்

Published : Dec 10, 2021, 10:28 PM IST
Ben Stokes: அலட்சியமான அம்பயரிங்.. பென் ஸ்டோக்ஸ் வீசிய 14 நோ பால்கள்..! கண்டுகொள்ளாத தேர்டு அம்பயர்

சுருக்கம்

ஆஸ்திரேலியா -  இங்கிலாந்து இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் வீசிய 14 நோ பால்களை 3வது அம்பயர் கவனிக்காத விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 8ம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 39 ரன்கள் தான் அடித்தார். ஆலி போப்ட் 35 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 21 ரன்களும் அடித்தனர். ஜோ ரூட் (0), பென் ஸ்டோக்ஸ் (5) ஆகிய சீனியர் நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 147 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அருமையாக ஆடி 94 ரன்கள் அடித்தார். 6 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அவர் தவறவிட்டதை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் தவறவிடவில்லை. மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய டிராவிஸ் சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் சிறப்பாக ஆடி பெரிய இன்னிங்ஸ் ஆடிய டிராவிஸ் ஹெட், 152 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக ஆடி 35 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 425 ரன்களை குவித்தது.

258 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 13 ரன்னிலும், ஹசீப் ஹமீத் 27 ரன்னிலும் ஆட்டமிழக்க, 61 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரூட் - மலான் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே நன்றாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் அடித்துள்ளது. டேவிட் மலான் 80 ரன்களுடனும், கேப்டன் ஜோ ரூட் 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் வீசிய நோ பால்களை தேர்டு அம்பயர் கவனிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இன்னிங்ஸின் 17வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் வார்னர் போல்டானார். ஆனால் அது நோ பால் என அறிவித்தார் தேர்டு அம்பயர். அந்த நோ பாலையடுத்து, அதற்கு முந்தைய 3 பந்துகளின் ரீப்ளேவை போட்ட, சேனல் 7 தொலைக்காட்சி அவை மூன்றுமே நோ பால் என காட்டியது. ஸ்டோக்ஸ் 4 பந்துகளையுமே நோ பாலாக வீசியதும், தேர்டு அம்பயர் அதை கவனிக்காமல், வார்னர் அவுட்டான 4வது பந்துக்கு மட்டும் நோ பால் கொடுத்ததும் தெரியவந்தது.

அதன்பின்னர் பென் ஸ்டோக்ஸின் பவுலிங்கை முழுமையாக ஆராய்ந்ததில், அவர் மொத்தமாக 14 நோ பால்கள் வீசியதும், அவற்றில் இரண்டுக்கு மட்டுமே நோ பால் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. நோ பால் பார்ப்பது கள நடுவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதால் தான், அதை நேரடியாக தேர்டு அம்பயரே பார்க்கும் விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் தேர்டு அம்பயரே தொடர் நோ பால்களை கவனிக்காதது, சர்வதேச கிரிக்கெட்டில் அம்பயரிங்கை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. 

அதுவும் ஆஷஸ் தொடர் மாதிரியான மிகப்பெரிய தொடரில், அதுவும் தேர்டு அம்பயரின் இதுமாதிரியான அலட்சியமான அம்பயரிங் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. இளம் வீரர் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன்!
இந்தியாவில் விளையாட முடியாது.. வங்கதேசம் திட்டவட்டம்.. 'ஆப்பு' வைக்கும் ஐசிசி.. அதிரடி மூவ்!