வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ 41 ரன்கள் எடுத்தார். தவ்ஹித் ஹிரிடோய் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், டிராவிஸ் ஹெட் 31 ரன்கள் எடுக்கவே, மிட்செல் மார்ஷ் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டேவிட் வார்னர் 51 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களும் எடுத்திருந்த போது மழை குறுக்கீடு ஏற்பட்டது. அப்போது ஆஸ்திரேலியா 11.1 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆஸ்திரேலியா டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக சூப்பர் 8 குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதே போன்று இந்தியாவும் ஒரு வெற்றி பெற்று 2ஆவது இடம் பிடித்துள்ளது.