
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் இந்த எடிஷன் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில், பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் 2வது டெஸ்ட், இன்றுடன் முடிவடையும் நிலையில், அந்த போட்டியில் தோல்வியை தவிர்த்து டிரா செய்ய இங்கிலாந்து அணி போராடிவருகிறது. கடைசி செசனில் ஆஸ்திரேலிய அணிக்கு 2 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் ஆஸ்திரேலியாவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதற்கடுத்து மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட், சிட்னியில் பிங்க் டெஸ்ட் மற்றும் ஹோபர்ட்டில் கடைசி டெஸ்ட் என மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட அதே அணியே கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட்டில் காயம் காரணமாக ஆடாத ஜோஷ் ஹேசில்வுட், 3வது டெஸ்ட்டுக்கு தயாராகிவிடுவார் என்பதால் அவரும் அணியில் இடம்பெற்றுள்ளார். கொரோனா பாசிட்டிவ் நபருடன் தொடர்பில் இருந்ததால் 2வது டெஸ்ட்டில் ஆடாமல் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட கேப்டன் கம்மின்ஸும் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார்.
ஆஷஸ் தொடரின் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி:
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜெய் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்.