Kohli vs Ganguly: கோலி விஷயத்துல நான் பேசுறதுக்கு எதுவுமில்ல; எதுவா இருந்தாலும் பிசிசிஐ டீல் பண்ணும்- கங்குலி

Published : Dec 18, 2021, 10:03 PM IST
Kohli vs Ganguly: கோலி விஷயத்துல நான் பேசுறதுக்கு எதுவுமில்ல; எதுவா இருந்தாலும் பிசிசிஐ டீல் பண்ணும்-  கங்குலி

சுருக்கம்

விராட் கோலி விவகாரத்தில் தான் பேசுவதற்கு எதுவுமில்லை என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி கூறிவிட்டார்.  

இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில், தெளிவு கிடைக்காமல் சர்ச்சை நீடிக்கிறது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் பலருக்கு அதிருப்தியளித்தது. இந்திய கிரிக்கெட்டுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள கோலியை, பிசிசிஐ கொஞ்சம் மரியாதையாக நடத்தியிருக்கலாம் என்பது பலரது கருத்து.

விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து பேசியிருந்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், ஆனால் விராட் கோலி அதை ஏற்க மறுத்து டி20 கேப்டன்சியிலிருந்து விலகியதால், வெள்ளைப்பந்து அணிகளுக்கு இருவேறு கேப்டன்கள் செயல்படுவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால் தான் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனது கேப்டன்சி நீக்கம், ரோஹித்துடனான உறவு என தன்னை சுற்றி பிண்ணப்பட்ட அனைத்து சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்தார் விராட் கோலி.

அப்போது கங்குலி கூறிய கருத்து மற்றும் தான் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் குறித்து பேசிய விராட் கோலி, பிசிசிஐ என்னை டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை. டி20 கேப்டன்சியிலிருந்து விலகும் என் முடிவை தெரிவித்தவுடன் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு தான், என்னை கேப்டன்சியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார். நான் சரி என்றேன். அவ்வளவுதானே தவிர, அதற்கு முன்பாக என்னிடம் கேப்டன்சி விஷயம் குறித்து தேர்வாளர்கள் பேசவேயில்லை. பிசிசிஐயும் என்னை டி20 கேப்டன்சியில் நீடிக்குமாறு அறிவுறுத்தவில்லை என்றார் கோலி.

கங்குலி கூறிய கருத்துக்கு முற்றிலும் முரணாக கோலி பேசியதால் குழப்பம் ஏற்பட்டது. இது பல்வேறு விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. இதையடுத்து, இதுதொடர்பாக பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மௌனம் கலைக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, இதை இதற்கு மேல் எடுத்துச்செல்ல விரும்பவில்லை. நான் சொல்வதற்கு எதுவுமில்லை. இது பிசிசிஐ சம்மந்தப்பட்ட விஷயம். இதை பிசிசிஐ-யே டீல் செய்யும் என்றார் கங்குலி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!