
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. அபிஷேக் ஷர்மா (31 பந்துகளில் 61 ரன் ), திலக் வர்மா (34 பந்துகளில் 49 ரன் ) ஆகியோரின் சூப்பர் பேட்டிங் பெரிய ஸ்கொருக்கு வழிவகுத்தது. இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரிலேயே துணை கேப்டன் சுப்மன் கில் (4) தீக்ஷனா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபக்கம் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா சிக்சரும், பவுண்டரியுமாக வெளுத்துக் கட்டினார். அட்டகாசமாக விளையாடிய அபிஷேக் சர்மா 21 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அதே வேளையில் மோசமான பார்மில் உள்ள கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் ஹசரஙா பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விரைவில் அபிஷேக்கும் ஆட்டமிழந்தார். சரித் அசலங்காவின் பந்தில் கமிந்து மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்தார். அபிஷேக் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகளுடன் 31 பந்தில் 61 ரன் விளாசினார்.
அதன்பின் களமிங்கிய சஞ்சு சாம்சன் சூப்பராக விளையாடினார். நல்ல பந்துகளை கவனமாக ஆடியும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பியும் பேட்டிங் செய்தார். மிடில் ஆர்டரில் சஞ்சு - திலக் ஜோடி 66 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதற்கிடையில், வனிந்து ஹசரங்காவுக்கு எதிராக சஞ்சு இரண்டு சிக்ஸர்களை அடித்தார். ஆனால், 16-வது ஓவரில் சஞ்சு ஆட்டமிழந்தார். தசுன் ஷனகாவின் பந்தில் அசலங்காவிடம் கேட்ச் கொடுத்தார். சஞ்சு தனது இன்னிங்ஸில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 23 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்
இந்தியா இமாலய இலக்கு
அடுத்த பந்திலேயே ஹர்திக் பாண்ட்யாவும் (2) ஆட்டமிழந்தார். துஷ்மந்த சமீரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். ஆனால், திலக் - அக்சர் படேல் (15 பந்துகளில் 21) ஜோடி ஸ்கோரை 200 கடக்க வைத்தது. இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் இந்தியா 200 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கு நோக்கி இலங்கை பேட்டிங் செய்கிறது.