
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. வழக்கம்போல் அதிரடியில் வெளுத்துக் கட்டிய அபிஷேக் சர்மா 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன் விளாசினார்.
கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 29 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 38 ரன் அடித்தார். முதல் 10 ஓவரில் 100 ரன்கள் அடித்த இந்தியா கடைசி 10 ஓவரில் 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணியின் பவுலிங், பீல்டிங் சிறப்பாக இருந்தது. அந்த அணி வீரர் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்கதேச அணி ரன்களை அடிக்கத் தடுமாறியது.
தொடக்க வீரர் டான்சித் ஹசன் (1) பும்ராவின் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு ஓரளவு சிறப்பாக விளையாடிய பர்வேஸ் ஹொசைன் இமான் (19 பந்தில் 21 ரன்) குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் ஓப்பனிங் வீரர் சைஃப் ஹாசன் அட்டகாசமாக விளையாடி பவுண்டரியும், சிக்சருமாக விளாசினார். அதே வேளையில் மற்ற பேட்ஸ்மேன்கள் இவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
தனி ஆளாக போராடிய சைஃப் ஹாசன்
தொடர்ந்து ஷமிம் ஹொசைன் (0) வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ஜேக்கர் அலி (4) ரன் அவுட் ஆனார். ஆனாலும் மற்றொரு பக்கம் தனி ஆளாக போராடி அரை சதம் அடித்த சைஃப் ஹாசன் அக்சர் படேல் தொடர்ந்து 2 சிக்சர் விளாசி அசத்தினார். மறுபுறம் முகமது சைஃபுதீன் (4) வருண் பந்தில் வீழ்ந்தார். இதற்கு அடுத்த ஓவரில் குல்தீப் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது ஓவரில் ரிஷாத் ஹொசைன் (2) தன்சிம் ஹசன் சாகிப் (0) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
இந்திய அணி வெற்றி
தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய சைஃப் ஹாசன் 51 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 69 ரன் அடுத்து பும்ரா பந்தில் கேட்ச் ஆனார். பிறகு முஸ்தாபிசுர் ரஹ்மானும் (6) அவுட் ஆக வங்கதேச அணி 19.3 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக ஆசிய கோப்பை 2025 தொடரின் பைனலுக்கு சென்றுள்ளது. தோல்வி அடைந்த வங்கதேசத்துக்கும் பைனலுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்த போட்டியிலும் 4 கேட்ச் விட்ட இந்தியா
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 ஓவரில் 16 ரன் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிரடி அரை சதம் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். பாகிஸ்தானுக்கு எதிராக ரன்களை வாரி வழங்கிய பும்ரா இந்த போட்டியில் 4 ஓவரில் 18 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். இந்த போட்டியிலும் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, குல்தீப் யாதவ் தலா ஒரு கேட்ச்சை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.