
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியாவும், வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஜாக்கர் அலி தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. முதல் 3 ஓவரில் இந்திய அணி 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா
அதன்பின்பு தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்தார். முகமது சைஃபுதீன் ஓவரில் சிக்சரும், பவுண்டரியுமாக பொளந்து கட்டினார். மறுபக்கம் சுப்மன் கில்லும் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி 6 ஓவரில் 72 ரன்கள் விளாசியது. தொடர்ந்து அதிரடியில் பட்டய கிளப்பிய அபிஷேக் சர்மா வெறும் 24 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.
சுப்மன் கில், ஷிவம் துபே அவுட்
அணியின் ஸ்கோர் 6.2 ஓவரில் 77 ரன்னாக உயர்ந்தபோது 19 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 29 ரன் அடித்த சுப்மன் கில் ரிஷாத் ஹொசைன் பந்தில் கேட்ச் ஆனார். பின்பு அனைவரும் ஆச்சரியம் அடையும்விதமாக ஒன் டவுன் களமிறங்கிய ஷிவம் துபே 2 ரன்னில் ரிஷாத் ஹொசைன் பந்தில் காலியானார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்.
அபிஷேக் சர்மா அதிரடி அரைசதம்
ஸ்கோர் 112 ஆக உயர்ந்தபோது ரிஷாத் ஹொசைனின் சூப்பரான பீல்டிங்கால் அபிஷேக் சர்மா எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவர் 37 பந்தில் 6 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ரன் விளாசி வெளியேறினார். பின்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ் (11 பந்தில் 5 ரன் ), திலக் வர்மா (5) அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்திய அணி 129/5 என பரிதவித்தது. கடைசி கட்டத்தில் வங்கதேச பவுலர்கள் ஸ்லோ பால்களை வீசியதால், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது.
கடைசியில் திணறிய இந்திய பேட்ஸ்மேன்கள்
அக்சர் படேல் ரன் அடிக்க கடுமையாக தடுமாறினார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா ஓரளவு சிறப்பாக விளையாடி சில பவுண்டரிகளை விரட்டினார். கடைசி ஓவரில் அவர் 29 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 38 ரன் அடித்து அவுட் ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் 15 பந்தில் 10 ரன் எடுத்து களத்தில் இருந்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் 10 ஓவரில் 100 ரன் அடித்த இந்தியா அடுத்த 10 ஓவரில் 68 ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.