என்னை நம்பி பந்தை கொடுத்தார் தல.. அவருக்கு தோல்வியை கொடுத்தேன் நான்..! அஷ்வின் வருத்தம்

By karthikeyan VFirst Published Jun 18, 2020, 6:34 PM IST
Highlights

தன்னை நம்பி தோனி கொடுத்த பணியை சரியாக செய்யாமல் தோல்வியடைந்தது குறித்து 10 ஆண்டுகள் கழித்து பகிர்ந்துள்ளார் அஷ்வின். 
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவர் அஷ்வின். இந்திய அணியிலும், ஐபிஎல்லில் தோனி கேப்டனாக இருந்த சிஎஸ்கே அணியிலும் அஷ்வின், ரெய்னா, ஜடேஜா ஆகிய மூவருக்கும் பேராதரவு அளித்து, தனது ஆஸ்தான வீரர்களாக அவர்களை எப்போதுமே அணியில் தக்கவைத்துக்கொண்டார் தோனி. 

தோனி, கேப்டன்சியிலிருந்து விலகிய பிறகு, கோலி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை ஏற்றபின்னர், அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அஷ்வின் தரமான ஸ்பின்னர் என்பதால், டெஸ்ட் அணியில் மட்டும் முதன்மை ஸ்பின்னராக ஆடிவருகிறார். 

தோனியின் மற்றொரு ஆஸ்தான வீரரான ஜடேஜாவும் முதலில் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் 2018 ஆசிய கோப்பையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் ஆல்ரவுண்டராக அசத்தியதால், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணியில் மீண்டும் இடத்தை பிடித்தார். 

ஆனால் அஷ்வினுக்கு மட்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐபிஎல்லிலும் 2018ம் ஆண்டு சிஎஸ்கேவிலிருந்து கழட்டிவிடப்பட்டார். 2018 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்ட அஷ்வின், அடுத்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடவுள்ளார். 

இந்நிலையில், தன்னை நம்பிய தோனிக்கு தலைகுனிவை ஏற்படுத்திய சம்பவம் குறித்து அஷ்வின் பகிர்ந்துள்ளார். 2010ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் லீக்கில் சிஎஸ்கேவும் விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸும் மோதிய போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவரில் விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணி, சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

அந்த சூப்பர் ஓவரை வீசியது அஷ்வின் தான். சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய புஷ்ரேஞ்சர்ஸ் அணி வீரர் டேவிட் ஹசி, அஷ்வின் பவுலிங்கில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 முறை 2 ரன்கள் அடித்தார். முதல் பந்தில் ஃபின்ச் அடித்த ஒரு சிங்கிளையும் சேர்த்து அந்த அணி சூப்பர் ஓவரில் மொத்தம் 23 ரன்களை குவித்தது. 24 ரன்களை அடிக்கமுடியாமல் சிஎஸ்கே தோற்றது. 

அந்த சூப்பர் ஓவரை வீசியது குறித்துத்தான் அஷ்வின் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அஷ்வின், போட்டி டையானதும், சூப்பர் ஓவர் வீசப்படுவதற்கு முன்பாக, ஃப்ளெமிங் வேகமாக ஓடிவந்தார். உடனடியாக ஒரு சின்ன டீம் மீட் நடத்தப்பட்டது. எல்லாரும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் சூப்பர் ஓவரை வீசுகிறேன் என்று நான் கை தூக்கினேன். பொலிஞ்சர், முரளி கார்த்திக் ஆகிய சீனியர் பவுலர்கள் இருக்கும்போது, நான் நானாக முன்வந்து சுப்பர் ஓவரை வீசுகிறேன் என்றேன். அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க இதை ஒரு அருமையான வாய்ப்பாக பார்த்தேன். வேறு எந்த கேப்டனாக இருந்தாலும், சூப்பர் ஓவரை ஒரு ஸ்பின்னரிடம் கொடுக்க யோசித்திருப்பார். ஆனால் தோனி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னிடம் பந்தை கொடுத்தார்.

இதையடுத்து சூப்பர் ஓவரை வீசினேன். டேவிட் ஹசி ஒரு சிக்ஸர் அடித்து என் மீதான அழுத்தத்தை அதிகரித்தார். அதன்பின்னர் நான் வேகமாக வீசினேன். யார்க்கர்களை வீச முயற்சித்தேன். ஆனால் யார்க்கர்களை துல்லியமாக வீசவில்லை. அதனால் டேவிட் ஹசி சிக்ஸர்களை விளாசி ஸ்கோர் செய்தார். என்னடா இப்படி பண்ணிட்ட..? என்று என்னை நானே திட்டிக்கொண்டேன். சூப்பர் ஓவரை வீசுகிறேன் என்று நீயாகவே முன்வந்தாய்(அவரை அவரே சொல்லிக்கொள்கிறார்).. உன்னை நம்பி கேப்டனும் உன்னிடம் கொடுத்தார்.. ஆனால் நீ இப்படி செய்து, அணியையும் உன் கேப்டனையும் தோற்கடித்துவிட்டாயே என்று என்னை நானே திட்டிக்கொண்டேன் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார். 
 

click me!