இந்தியாவின் படுமோசமான கேப்டன் சுயநல சச்சின்..! உலக கோப்பை வின்னிங் அணியின் முன்னாள் வீரர் கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Jun 18, 2020, 4:25 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கரால் வெற்றிகரமான கேப்டனாக திகழ முடியாததற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். 
 

சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர். 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி, அதிக ரன்கள், அதிக சதங்கள் என பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தன்னகத்தே கொண்டவர். 

இந்திய அணிக்காக 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 51 சதங்களுடன் 15921 ரன்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49 சதங்களுடன் 18426 ரன்களையும் குவித்துள்ளார். 100 சர்வதேச சதங்களுடன் 34,357 ரன்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்கிறார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இன்னொரு வீரர் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். 

சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தாலும், அவர் கேப்டன்சியில் சோபிக்கவில்லை. அணியை திறம்பட வழிநடத்த முடியாமல், இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மோசமான கேப்டன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். 

சச்சின் டெண்டுல்கரின் கேப்டன்சியில் இந்திய அணி 73 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடி வெறும் 23 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில், கேப்டனாக அவரது வெற்றி விகிதம் வெறும் 35.07. இதுதான் இந்திய கிரிக்கெட்டில் ஒரு கேப்டனின் மோசமான வெற்றி விகிதம். அதேபோல சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் இந்திய அணி ஆடிய 25 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. 

இவ்வாறு வெற்றி விகிதங்களின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட்டின் மோசமான கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார். அவருக்கு பின்னர் கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலி தான், படுகுழியில் கிடந்த இந்திய அணியை மீட்டெடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிநடை போடவைத்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர் ஒரு வீரராக அளப்பரிய பங்காற்றியிருக்கிறார் என்றாலும், அவரால் கேப்டனாக ஜொலிக்க முடியவில்லை. 

அதுகுறித்து பேசியுள்ள 1983 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மதன் லால், சச்சின் டெண்டுல்கர் சிறந்த கேப்டன் கிடையாது. சச்சின் கேப்டனாக இருக்கும்போதும், அவரது தனிப்பட்ட ஆட்டத்தில் தான் கவனம் செலுத்தினாரே தவிர, அணியை பற்றி கவலைப்படவில்லை. ஒரு கேப்டன் என்பவர், அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்தும் அதேவேளையில், அணியின் மற்ற வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிகொண்டுவந்து ஒரு அணியாக சிறப்பான ஆட்டத்தை ஆடுவதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் தான் மட்டும் நன்றாக ஆடுவதில் கவனம் செலுத்திய சச்சின், மற்ற 10 வீரர்களை சிறப்பாக கையாண்டு சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவர தவறிவிட்டார். அவரால் அது முடியவும் இல்லை என்று மதன் லால் தெரிவித்துள்ளார். 

click me!