எப்பேர்ப்பட்ட பிளேயர் அவரு... காரணமே இல்லாம உட்கார வச்சுட்டாய்ங்களே.. கவாஸ்கரை அதிரவைத்த இந்திய அணி தேர்வு

By karthikeyan VFirst Published Aug 23, 2019, 1:53 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு தனக்கு அதிர்ச்சியளித்ததாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நேற்று தொடங்கியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது முதல் போட்டி. 

இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் - ஹனுமா விஹாரி ஆகிய இருவரில் யார் இறக்கப்படுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. கங்குலி, சேவாக், அக்தர் ஆகியோர் ரோஹித்தைத்தான் சேர்க்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

ஆனால் ரோஹித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஹனுமா விஹாரி தான் அணியில் எடுக்கப்பட்டிருந்தார். அதேபோல அஷ்வின் - குல்தீப் இருவரில் யார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர் என்ற வகையிலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்திருக்கும் வீரருமான அஷ்வினைத்தான் எடுக்க வேண்டும் என்பதே முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. 

அஷ்வின் - குல்தீப் ஆகிய இருவரில் யார் என்று கேட்டால், நான் அஷ்வினைத்தான் தேர்வு செய்வேன். அணியின் முதன்மை ஸ்பின்னரை தான் அணியில் எடுக்க வேண்டும். நமது அணியின் முதன்மை ஸ்பின்னர் அஷ்வின் தான் என்று சேவாக் போட்டிக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், அஷ்வின் - குல்தீப் இருவருமே எடுக்கப்படாமல் ஜடேஜா எடுக்கப்பட்டார். ஜடேஜா நல்ல ஆல்ரவுண்டர் தான் என்றாலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக வீசியிருக்கக்கூடிய அஷ்வின் ஓரங்கட்டப்பட்டார். 

அஷ்வின் புறக்கணிக்கப்பட்டதும், அப்போது வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், அஷ்வினின் புறக்கணிப்பு தனக்கு அதிர்ச்சியளித்ததாக தெரிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும், அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் அஷ்வினுக்கு ஆடும் லெவனில் இடமில்லை. எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது என்று கவாஸ்கர் தெரிவித்தார். 
 

click me!